(Reading time: 26 - 51 minutes)

காவ்யாவின் சீமந்தம் சென்னையில் நடைபெற இருப்பதால் சுசீலா கிருஷ்ணமூர்த்தி இருவரும் சென்னை செல்வதாக இருந்தது. ரத்னாவதியும் நிலாவும் பெங்களூரில் இருந்து சென்னை வந்துவிடுவதாக கூறவும் சந்தோஷ் குடும்பத்தினரை சந்தித்து பேசிவிடலாம் என்று நினைத்திருந்தனர்.

சுசீலாவிற்கு தனது ஆராய்ச்சி பற்றி விரிவாக கூறியிருந்தாள் அபூர்வா. அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொண்ட சுசீலா, அபூர்வா வர முடியாது என்று கூறியதைப் புரிந்து கொண்டார். மேலும் அவளோடு மகனும் உடன் உதவியாக இருப்பதே உசிதம் என்று எண்ணியே சித்தார்த்தையும் வர வற்புறுத்தவில்லை.

“ஒரு வேளை பத்மாவிற்கு உதவி தேவைபட்டா நான் அங்கேயே இருக்க வேண்டி இருந்தாலும் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”

“எங்களுக்கு என்னம்மா. நாங்க மேனேஜ் பண்ணிப்போம். அப்பாக்கு ஓகேவான்னு கேளுங்க” கண்ணடித்து மகன் சொல்லவும் அவன் தலையில் செல்லமாய் கொட்டினார்.

“உன் அப்பா ரெண்டு வாரம் கழித்து பாரின் ட்ரிப் போறாராம். வர ஒரு மாசம் ஆகுமாம்”

“அப்போ எல்லாமே முன்னாடியே பக்காவா பிளான் பண்ணிடீங்க. அப்படி தானே அத்தை”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்...

“நீ எப்போ ஜெனீவா போகணும் அபி. நீ போகும் போது லக்ஷ்மிய சென்னை அனுப்பிடுங்க. அப்புறம் நீங்களும் அங்கே வந்திடுங்க”

லக்ஷ்மி சித்தார்த் வீட்டில் வேலை செய்பவர். சென்னையில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவரை பத்மா வீட்டில் பணிபுரியும் செண்பகம் அறிமுகம் செய்து வைக்கவும் அச்சமயம் அபூர்வா சித்தார்த் இருவரும் யூ எஸ்ஸிலும் ரத்னாவதி நிலா பெங்களூரிலும் இருந்த போது தனக்கு துணையாக இருக்க சுசீலா  தில்லி அழைத்து வந்திருந்தார்.

“லக்ஷ்மிமாவை  இப்போவே கூட கூட்டிட்டு போங்க. நான் உங்க மருமகளுக்கு குறை இல்லாம சமைச்சு போடுவேன். என்னைய நம்பலாம்” சித்தார்த் சிரித்துக் கொண்டே சொல்லவும் அபூர்வா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“பாருங்கம்மா நான் சமைக்கிறேன் அத்தைன்னு  பேச்சுக்கு கூட சொல்ல மாட்டேங்குறா” சித்தார்த் குறை கூறவும் அவனை முறைத்தாள் அபூர்வா.

“ஹல்லோ. என்னவோ எங்களுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாத மாதிரி பில்ட் அப் குடுக்க வேணாம். நீயே வாலண்டீர் பண்ணிட்ட. அதான் நல்லதா போச்சுன்னு அமைதியா இருக்கேன்” சண்டைக்கு வந்தாள்.

“அபி சமையல் அப்படியே அண்ணா கைப்பக்குவம்” சுசீலா எதேச்சையாக சொல்லிவிடவும் அபூர்வா தட்டில் இருந்த உணவில் கோலம் வரைந்தாள்.

விஜயகுமார் நன்றாக சமைக்கக் கூடியவர். வீட்டில் இருக்கும் போதெல்லாம் மனைவிக்கு சமையலில் உதவி செய்வதோடு தானே சுவையாக சமைக்கவும் செய்வார். விசேஷ நாட்களில் சித்தார்த் குடும்பமும் சேர்த்து கொள்ள விஜயகுமார் நளபாகம் தான்.

“உன் அம்மாக்கு தோசை சுட கூட நான் தான் பூக்குட்டி சொல்லிக் குடுத்தேன்” மனைவியைக்  கேலி செய்தபடியே நிலா விரும்பிக் கேட்கும் மிக்கி தோசை, ஸ்டார் தோசை என்று வித வித டிசைன்களில் தோசை சுட்டுக் கொடுப்பார் விஜயகுமார்.

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கத்துக்க முடியலைனாலும் நமக்கு தினம் பயன்பாட்டில் தேவைப்படும் சில கலைகளை முடிந்தவரை கத்துக்கணும் பூக்குட்டி.” விஜயகுமார் தனக்கு தெரிந்த கலைகளை மகளுக்கு சொல்லிக் கொடுத்தார். அதில் சமையலும் அடக்கம்.

அபூர்வா இதை சித்தார்த்திடம் பகிரவும் அவனும் லலிதாம்பிகையிடமும் சுசீலாவிடம் கேட்டு சமையல் கற்று கொண்டான். பின்னாளில் யூ எஸ்ஸில் வசிக்கும் போது இருவருக்குமே கற்ற கலை கைகொடுத்தது.

ஆனால் நிலா மட்டும் விதிவிலக்கு.

“பேபி சின்ன பாப்பா தானே. அவ கை சுட்டுப்பா” இப்படி சொல்லி சொல்லியே நிலாவை சமையலறை பக்கமே விட மாட்டான் சித்தார்த். அதனாலேயே அவள் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுவாள் என கல்லூரி சேரும் போது ரத்னாவதி அவளுடனே வசிக்க ஏற்பாடு செய்தான்.

சுசீலா விஜயகுமார் பற்றிக் கூறியதும்  அபூர்வா அமைதியாக ஆகிவிட்டதை உணர்ந்து கொண்ட சித்தார்த் பேச்சை திசை திருப்பினான்.

“சந்தோஷ்க்கு சமைக்க தெரியுமான்னு கேக்காம விட்டுட்டியே பில்லி. ரொம்ப முக்கியமான குவாலிபிகேஷன் ஆச்சே”

“டேய் என்ன தான் உங்க பிரண்டா இருந்தாலும் வீட்டுக்கு வர போற மாப்பிள்ளை” சுசீலா சொல்லவும்

“ஹும்கும் நீங்க தான் உங்க பயந்தாங்கொள்ளி மாப்பிள்ளை கறிவேப்பிலைய மெச்சிக்கணும் அத்தை. போன சண்டே போன் பண்ணிருந்தான். ஆபீஸ் விஷயமா பெங்களூர் போறேன் நிலாவ பார்க்கலாமான்னு என்கிட்டே பர்மிஷன் கேட்டுட்டு இருக்கான். அம்மா தான் அங்க இருக்காங்க. அப்புறம் எதுக்கு என்கிட்டே தயங்கி தயங்கி பர்மிஷன் கேட்டான்னு புரியல”

“ஹஹஹஹஹா....இதை என்கிட்டே நீ சொல்லவே இல்லையே பில்லி”

“இந்த பெரிய சாத்தானும் அந்த குட்டி சாத்தானும் என்னை பத்தி அவன்கிட்ட என்ன தான் சொல்லி வச்சிருக்குங்களோ தெரியல அத்தை. அவன் அப்படி கேக்கவும் எனக்கே ஒரு மாதிரி ஆகிருச்சு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.