(Reading time: 18 - 36 minutes)

தேங்க் யூ சஞ்சு!” என்றபடி அவன் கைகளை பிடித்து கொண்டாள்.

சரயூவின் நண்பன் ஜெய் என்றும் அவர்களுக்கிடையில் ஏதோ பிரச்சனை என்று மட்டுமே அறிந்திருந்த கிரண், அங்கு நடந்ததை கண்ட அதிர்ச்சியில் உறைந்து போனான். 

சரயூவை கண்ட அந்த நொடியே அவளிடம் காதல் கொண்டுவிட்டான்.  அவளும் தன்னுடைய கல்லூரியில் படிக்கிறாள் என்றபோதோ அவனுக்காகவே அவள் என்ற எண்ணம் மனதில் விதையாகியது.  அவளுடனான இத்தனை நாள் பழக்கமும் அவனுக்கு எந்த வித சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.  சரயூவின் நடவடிக்கைகளை கவனித்தவனுக்கு அவள் யாரையும் காதலிக்கவில்லை என்பது உறுதி.  ஆனால் அவன் சற்றும் யோசிக்காதது, அவனல்லாது அவளை வேறொருவனும் காதலிப்பானென்பது! அதுவும் அவள் எப்போதும் ஒட்டி கொண்டு திரியும் ஜெய் அவளை காதலிப்பானென்பது கற்பனையில் கூட யோசித்திராத ஒன்று. 

ஜெய் தன்னோடு பேசவில்லை என்று இந்த ஒரு மாதமாய் புலம்பிய சரயூவும், ஜெய்யின் காதல் ததும்பிய விழிகளும் கிரணின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.  சரயூவின் மனதில் காதல் இல்லை என்பதில் கிரணுக்கு இருக்கும் உறுதி ஜெய்யின் கண்களில் வழிந்த காதலை நினைக்கும் போது புயலில் சிக்கிய வாழையாக நிலைக் குலைந்தது.  ஜெய்யின் காதல் அவளை தன்னிடமிருந்து பிரித்து விடுமோ என்ற பயம் அவனை உடனடியாக எதையாவது செய்ய வேண்டுமெனத் தூண்டியது.

“சரயூ லேட்டாகுது.. நாம இப்பவே கிளம்பினாதா சரியா இருக்கும்?” அவர்களின் அருகே வந்தான்.

இன்னமும் திருமணம் முடிந்திராத நிலையில் கிளம்ப வேண்டுமென்றால் மைத்ரீயும் சஞ்சயும் என்ன சொல்வார்கள்!  இந்த போட்டியினால் ஆரம்பித்த பிரச்சனை சற்று முன் தான் முடிந்திருக்க, அவன் என்ன சொல்லுவான்!  

தயக்கத்தோடு ஜெய்யை ஏறிட்டாள் சரயூ.

அவளின் நிலையை அறிந்தவனோ ஒரு குளிர் புன்னகையோடு, “நீ கிளம்பு, சரூ! இத்தனை நாள் ப்ராக்டீஸ் செய்துட்டு இப்போ போகலைனா நல்லாயிருக்காது”

அவன் புன்னகையோடு சொன்ன போதும், இவளிடம் இன்னமும் தயக்கம்.  மறுபடியும் இவளோடு பேசாமல் அவன் முரண்டினால் என்ன செய்வது?

“சொல்ற இல்ல.. நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்.  உங்கிட்ட பேசாமாயிருப்பேனு கவலைபடவும் வேணா! லேட் பண்ணாம கிளம்பு சரூ” அவளின் தலையை தடவியபடி அவன் உறுதியாக சொன்ன பிறகுதான் அவளுள் நிம்மதி பரவியது.

அங்கு நடப்பதை தடுக்க முடியாமல் தத்தளித்த கிரண், இறுகிய முகத்தோடு ஜெய்யை முறைத்தான்.

தன் தலையை ஆட்டியவள் மைத்ரீயிடம் திரும்பி, “ஸாரி மைதி! நான் இப்போ போகனும்.  ஆனா உன்னோட கல்யாணத்தப்போ உன் பக்கத்திலியே இருப்பேன்” அவளை தழுவி கொண்டாள்.

“என் கல்யாணத்தன்னைக்கு உன்னோடு கல்யாணமே இருந்தாலும், நான் உன்னை என்னோடதா வச்சிப்பேன் சரயூ” ஜெய்யை பார்த்து ரகசியமாக சிரித்தாள் மைத்ரீ.

மைத்ரீயிடமிருந்து விலகியவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக

“மைதி, சொல்ல மறந்துட்ட! ராகுல் கல்யாணத்துக்கு வரேனு சொல்லியிருந்தா”

ராகுலின் பெயரை கேட்டவுடன் மைத்ரீக்கு சற்று முன்பு நடந்திருந்த அவர்களின் பேச்சும், இவளின் குழப்பமும் நினைவு வர சரயூவிடம் பேசாது அமைதியானாள்.

“பாஸ் ஆல்ரெடி வந்தாச்சு, சரூ! முன்னாடி உட்கார்ந்திருக்காரு” ஜெய்யிடமிருந்து பதில் வந்தது.

மறுபடியும் சரயூ ஜெய்யிடம் பேசுவதை தடுக்க நினைத்த கிரண் இடையிட்டான்.

“சரயூ நேரமாச்சு!” சலிப்பும் கோபமாக வந்த வார்த்தைகளில் அனைவரும் கிரணை ஏறிட்டனர்.

“காம் டௌன் கிரண்!” அவனை சமாதான படுத்திய வேதிக், “சரயூ இன்னும் லேட் பண்ணா நேரத்துக்கு இஸ்கான் போக முடியாது.  வா போகலாம்”

எல்லோரின் கவனமும் இப்போது வேதிக்கிடம் திரும்பியிருக்க கிரண் ஜெய்யை முறைத்து கொண்டிருந்தான்.  தற்செயலாக அவன் பக்கம் திரும்பிய ஜெய் அதை கவனித்து விட்டான். 

‘இவன் ஏன் இப்படி முறைக்கிறான்?!’ யோசித்தவனுக்கு, மனம், கிரணைப் பற்றி எச்சரித்தது ஞாபகம் வந்தது.

ஜெய் தன்னை கவனிப்பதை உணர்ந்த கிரண், சரயூவை நெருங்கி நின்று, மறுபடியும் அவனை முறைத்தான்.       

ஜெய் அமைதியான புன்னகையுடன் கிரணை நோக்கினான்.

இதை சற்றும் எதிர்ப்பாராத கிரண் தடுமாறினான்.  சரயூவின் மீதான தன் விருப்பத்தை அறிந்து ஒன்று கோபம் கொள்வான்; இல்லை தான் அவனுடைய சீனியர் என்பதால் பயந்து விலகிவிடுவான் என்று நினைத்தான்.  மாறாக ஜெய்யின் இந்த செயலோ அவனின் கோபத்தை மேலும் கூட்டியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.