(Reading time: 22 - 44 minutes)

18. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

மூங்கில் தோட்டம்… மூலிகை வாசம்…

நிறைஞ்ச மௌனம்… நீ பாடும் கீதம்…

பௌர்ணமி இரவு… பனி விழும் காடு…

ஒத்தயடிப் பாதை… உன் கூட பொடிநடை…

இது போதும் எனக்கு இது போதுமே

வேறென்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறென்ன வேணும் நீ போதுமே

நீலகிரி மாலைப்பாதையில் குன்னூரில் உள்ள, DR டீ எஸ்டேட்டில் உள்ள எஸ்டேட் பங்களாவை நோக்கி துஷ்யந்தின் கார் சென்றுக் கொண்டிருந்தது…. நேற்று இரவே கோயம்புத்தூரில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வெடுக்காமல், அங்கே அலுவலகத்திலிருந்தே காரை எடுத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டவன், இதோ இந்த விடியற்காலைப் பொழுதில் அவர்களின் தேயிலைத் தோட்டத்தை நெருங்கிவிட்டான்…

முற்றிலும் பனி சூழ்ந்து, இன்னும் இருள் விலகாத இந்த விடியல் பொழுது மிக ரம்மியமாக இருந்தது…. சுற்றிலும் தேயிலைத் தோட்டம், அதன் நடுவே அவர்கள் பங்களா நவீன முறையில் பராமரிக்கப்பட்டு அழகாக காட்சியளித்தது…

DR எஸ்டேட் என்ற பெயர் பலகையோடு அவர்கள் எஸ்டேட்டிலிருந்து பங்களாவிற்கு செல்லும் பாதையில் காரை செலுத்தினான்…. சிறுவயதில் எத்தனையோ முறை இந்த எஸ்டேட்டிற்கு வந்திருக்கிறான்… அந்த ஞாபகங்கள் எத்தனைத்தனையோ…. ஆனால் இப்போது இந்த இடத்தில் நுழையும்போது அவனின் நினைவுகள் முழுதையும் ஆக்கிரமித்திருந்தது கங்கா மட்டுமே…

இங்கு வந்தால் கங்காவின் நினைவுகள் கண்டிப்பாக வரும் என்பதாலேயே இந்த 6 வருடமாக இங்கு வருவதை அவன் தவிர்த்து வந்தான்… கங்காவின் ஞாபகங்கள் எப்போதும் பசுமையாக இவன் நெஞ்சத்தில் பதிந்து தான் இருக்கின்றன… இருந்தும் தற்சமயம் அவளிடம் பழக ஒரு எல்லைக்கோடை இவன் உருவாக்கியிருக்க, இங்கு வந்தால் அந்த இனிமை நினைவுகளால் இவன் மனம்மாறி அவளிடம் காதலை யாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுமோ என்று தான் இவன் இங்கு வராமல் இருந்தான்….

ஆனால் நேற்று முன்தின இரவு, மயக்கத்தில் கூட இவன் பேரை உச்சரித்து, இவன் கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டதே கங்காவின் மனதை சொல்லாமல் சொல்லிவிட்டது, இருந்தும் அதையே வாய்ப்பாக பயன்படுத்தி, என்னை   காதலிக்க வேண்டும், கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவளை தொந்தரவு செய்ய விரும்பவுமில்லை… முன்போல அவளிடம் விலகியிருக்க மனமும் வரவில்லை…. அதற்காகவே அவள் நினைவுகளோடு பொழுதை கழிக்கவே இங்கு வர முடிவு செய்தான்… ஆனால் இங்கிருந்து செல்லும்போது தன் காதலை அவளிடம் சொல்லி, அவளின் காதலை யாசித்து, திருமணம் செய்துக் கொள்ளலாம், என்று கேட்கும் முடிவோடு தான் செல்வான், என்பது அவனே அறியாத ஒன்று…

வன் கார் சென்றுக் கொண்டிருந்த சாலையை அடுத்து கொஞ்சம் தள்ளி ஒரு ஒற்றையடிப் பாதை அமைந்திருந்தது…. அவன் கார் செல்லும் சாலை, எஸ்டேட் பங்களாவிற்கு செல்ல மட்டுமே போடப்பட்டுள்ளது… ஆனால் அந்த ஒற்றையடிப் பாதை சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு சென்று வருவது போல் அமைந்திருக்கும், எஸ்டேட் பங்களாவிற்கும் செல்லவும் அந்த பாதையை பயன்படுத்தலாம்…

பொதுவாக காலை மற்றும் மாலை வேலைகளில் துஷ்யந்தும், கங்காவும் அந்த பாதையில் நடைப்பயிற்சி செய்வார்கள்… உடற்பயிற்சிக்கான நடையாக இல்லாமல், இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக் கொண்டு மெல்ல நடப்பார்கள்… அப்படியே நடந்து சிறிது தூரம் வந்து சில சமயங்களில் அந்த தேயிலைத் தோட்டத்தில் அமரவும் செய்வார்கள்…. அப்படி நடக்கும் போது, சில சமயங்களில் அவர்களுக்குள் மௌனமே சூழ்ந்திருக்கும், சில சமயங்களில் பேசிக் கொண்டே நடப்பார்கள்…

பேசுவதென்றால் அங்கே கங்கா மட்டும் தான் பேசுவாள்… துஷ்யந்த் அதை கேட்டுக் கொண்டே வருவான்…. இப்போது இருக்கும் கங்காவை பார்த்தால், இவள் அவ்வளவு பேசுவாளா..?? என்று ஆச்சர்யம் தான் ஏற்படும்… அவள் பொதுவாக வாயாடுபவள் இல்லை…. அதற்காக பேசாமடந்தையும் இல்லை… பேச ஆரம்பித்தால், கலகலப்பாக பேசுவாள்…. அப்படி தான் அவனிடமும் பேசிக் கொண்டு வருவாள்…. ஒருவேளை அவனுக்காகவே அப்படி பேசக் கற்றுக் கொண்டாளோ…??

ஒருநாள் தன் பெற்றோர்களைப் பற்றி பேசுவாள், ஒருநாள் தன் தங்கையைப் பற்றி பேசுவாள், அவளுக்கு பிடித்தவற்றை சொல்வாள், படிப்பு, விளையாட்டு, தினசரி செய்தி தாள்களில் உள்ள சிறப்பு செய்திகள், சினிமா, அவள் படித்த கல்லூரி பற்றி இப்படி எதைப் பற்றியும் பேசிக் கொண்டு வருவாள்…. அவளின் கைகளோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டு வருவதோ, இல்லை இயற்கையை ரசித்துக் கொண்டு மௌனமாக வருவதோ..!! எப்படியிருந்தாலும், அந்த நேரம் துஷ்யந்த் வாழ்க்கையின் வரமான நாட்கள்…. இப்படியே வாழ்நாள் முழுக்க இருந்துவிடலாம் என்று தோன்றிய நாட்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.