(Reading time: 22 - 44 minutes)

ன்றும் அப்படித்தான், இருவரும் அந்த விடியற்காலையிலேயே நடைப்பயிற்சிக்கு தயாராயினர்… ஆறு வருடங்களுக்கு முன், அப்போது துஷ்யந்திற்கு 25 வயது, கங்காவிற்கு 20 வயது, அந்த வயதுக்குண்டான இளமையோடு, தற்போது இருப்பதை விட கொஞ்சம் ஒல்லியாக இருந்தனர் இருவரும்… காலர் இல்லாத கருப்பு நிற முழுக்கை டி.சர்ட்டும், இள நீல ஜீன்சும், கழுத்தில் ப்ரவுன் நிற மப்ளரும் அணிந்திருந்தான் துஷ்யந்த்…. ஒற்றை பின்னலிட்டு, பேபி பிங்க் நிற சின்தடிக் புடவைக்கு மேலே, மெரூன் நிற உல்லன் ஸ்வட்டரை பட்டன் போடாமல் அணிந்திருந்தாள் கங்கா…

அவனின் கழுத்தளவு உயரம் அவள்..இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு மௌனமாகவே இயற்கையை ரசித்தப்படி நடந்தனர்…. பங்களாவை விட்டு கொஞ்சம் தூரம் வந்திருப்பர்… அப்போது கங்காவின் பாதத்தை ஒரு ஆணி பதம் பார்த்தது…

ஆ.. என்று அலறியப்படியே காலை தூக்கி கொண்டாள் அவள்… “என்னாச்சு கங்கா..” என்று பதறியப்படியே கீழே முழங்காலிட்டு உட்கார்ந்து அவளின் காலை கவனித்தான்… அவள் அணிந்திருந்த செருப்பை தாண்டியும் அந்த ஆணி ஆழமாக அவள் காலில் குத்தியிருந்தது… அவள் காலைப் பிடித்து, செருப்பை கழற்றியவன், மெதுவாக அவள் பாதத்தில் குத்தியிருந்த ஆணியை பிடுங்கினான்…. குத்தும் போது ஏற்பட்ட வலியை விட, அதை எடுக்கும்போது அதிகம் வலித்தது அவளுக்கு, அதை எடுத்த நொடி, வலித் தாங்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது…

அவள் கண்களில் கண்ணீரை கண்டதும், கங்கா இவ்வளவு மென்மையானவளா..?? என்ற கேள்வி தான் உதித்தது அவனுக்கு… அவளிடம் எவ்வளவு முரட்டுத்தனத்தை காட்டியிருக்கிறான்… மெல்ல அதையெல்லாம் யோசித்துப் பார்த்தான்… காலில் குத்தியிருந்த ஆணியை பிடுங்கியதும், அங்கே லேசாக இரத்தம் கசிந்தது… அதை கழுத்தில் அணிந்திருந்த மப்ளரால் துடைத்துவிட்டான்… திரும்பவும் வலித்தாங்காமல் ஆ.. என்று முனகினாள்…

“வீட்டுக்குப் போனதும் மருந்துப் போட்டுக்கலாம் கங்கா..” என்றான் அவன்… பின் அவள் காலில் செருப்பை மாட்டும் போதுதான், அந்த செருப்பை கவனித்தான்…. எப்போதும் வேண்டுமானாலும் பிய்ந்து போகலாம் என்ற நிலைமையில் இருந்தது அது… அந்த ஆணி காலில் குத்தியதற்கு அதுவே ஒரு காரணம்… இவ்வளவு மோசமாகவா செருப்பு அணிந்திருக்கிறாள்…?? இதையெல்லாம் அவன் கவனித்தது கூட இல்லை… முதலில் வேலையாட்களிடம் சொல்லி, அவளுக்கு ஒரு நல்ல செருப்பு வாங்க வேண்டுமென்று நினைத்தான்..

அவளால் திரும்ப பாதத்தை மண்ணில் ஊன முடியவில்லை… அதிகமாக வலித்தது… கொஞ்சம் தாங்கி தாங்கி நடந்தாள்… அந்த பாதம் தரையில் படும்போதெல்லாம் வலியால் அவள் முகம் சுருங்கியது… அதை கவனித்துக் கொண்டு வந்தான் அவன்…. இப்படியே நடந்து வீடு வரை அவளால் செல்ல முடியாது… வரும்போது கையில் அலைபேசியும் எடுத்து வரவில்லை…. இந்த நேரத்தில் வேலையாட்களும் இந்தப்பக்கம் வரமாட்டார்கள்… என்ன செய்வது என்று யோசித்தவன்,

“கங்கா… உன்னால அவ்வளவு தூரம் நடக்க முடியாது… நீ இங்கேயே உக்காரு… நான் போய் டூ வீலர் எடுத்துட்டு வரேன்.. அதுல போலாம்…” என்றான்…

“அய்யோ அதெல்லாம் வேண்டாம்… என்னால நடக்க முடியும்… கொஞ்ச தூரம் தான மெதுவா போயிடலாம்… நான் நடந்தே வரேன்..” என்றாள் அவள்..

“இங்கப்பாரு நடக்கும்போது ரொம்ப வலிக்கும்…  சொன்னாக் கேளு… நீ இங்கேயே இரு, நான் போய் வண்டி எடுத்துக்கிட்டு வரேன்…”

“இங்கப் பாருங்க.. இது தாங்கிக்க கூடிய வலி தான்… இதோ கொஞ்சம் தூரம் தானே, அதுவரைக்கும் வலியை பொறுத்துப்பேன்… அதனால நாம நடந்தே போவோம்..” என்றவள், மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்… அவனுக்கு தெரியாமல் இருக்க, வலியின் வேதனையை முகத்தில் காட்டாமல் நடந்தாள்… கொஞ்சம் வேகமாக நடக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை… மெதுவாக தாங்கி தாங்கி தான் நடந்தாள்..

அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனால் அவளின் வலியை உணர முடிந்தது… இப்படியே இவள் வீடு வரை நடந்து வருவது கஷ்டம் என்று உணர்ந்தவன், உடனே இரு கைகளால் அவளை தூக்கிக் கொண்டான்…

திடீரென்று அவன் செய்த செயலை எதிர்பார்க்காதவள், “என்ன செய்றீங்கப்பா விடுங்க… நான் மெதுவா நடந்தே வருவேன்..” என்றாள்…

“இங்கப்பாரு உனக்கு வலிக்கும்… வீடு வரைக்கும் உன்னால நடக்க முடியாது… அதனால நானே உன்னை தூக்கிட்டு வருவேன்… பேசாம வா..” என்று அவளை தூக்கியப்படியே நடந்தான்.

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க… இப்போ தான் நீங்க கொஞ்சம் சரியாகிட்டு வர்றீங்க.. இப்படி என்னை தூக்கிட்டு அவ்வளவு தூரம் போவீங்களா..?? என்னை இறக்கி விடுங்கப்பா..” என்றவள், அவன் பிடியிலிருந்து இறங்க முயற்சித்தாள்.

“எனக்கென்ன நான் இப்போ ஹெல்த்தியா தான் இருக்கேன்… எனக்கொன்னும் பிரச்சனையில்லை… நீ ஒன்னும் அவ்வளவு வெய்ட்டும் இல்ல… எனக்கு உன்னை தூக்கிட்டுப் போறதுல கஷ்டமுமில்லை.. புரிஞ்சுதா..??”

“என்னோட வெய்ட் என்னன்னு எனக்கு தெரியும்… உங்க வெய்ட் என்னன்னும் எனக்கு தெரியும்… அவ்வளவு தூரம் நீங்க என்ன தூக்கிட்டுப் போக முடியாது…  நீங்க முதல்ல சொன்ன மாதிரியே செய்யலாம்… நான் இங்கேயே உக்கார்றேன்… நீங்க போய் வண்டி எடுத்துக்கிட்டு வாங்க..”

“இல்ல. இப்போ இந்த ப்ளானே நல்லா தான் இருக்கு… காலையில நான் எக்சர்ஸைஸ் செய்யல இல்ல… இப்போ உன்னை தூக்கிட்டுப் போறத, எக்சர்ஸைஸ் செய்யறதா நினைச்சுக்கிறேன்… நீ இப்படி கைய தொங்கப் போட்டுக்கிட்டு வராம, என்னை பிடிச்சுக்கிட்டா, நல்லா இருக்கும்..” என்றான்… இனி அவனிடம் எது சொன்னாலும் நடக்காது என்பதை புரிந்துக் கொண்டவள்… தன் இரு கைகளால் அவன் தோள்களை பிடித்துக் கொண்டாள்….

எப்போதோ நடந்ததை, இப்போது நடந்தது போல், கண்ணில் விரிந்த காட்சிகளை நினைத்து ரசித்தப்படி துஷ்யந்த் எஸ்டேட் பங்களாவில் காரோடு நுழைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.