(Reading time: 35 - 70 minutes)

11. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

ந்த குறுஞ்சாலையின் ஒரு ஓரம் நடந்திருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது ஹார்ன் சத்தம், திரும்பிபார்க்கும்போது கார் வெகு அருகில் வந்து விட்டது இவள் அசையாவிடில் அது இவளை நிச்சயம் உரசியிருக்கும். காவ்யா திரும்பி அங்கேயே அசையாது நின்றாள். அவளுடைய ஆடையை உரசி “க்ரீரீச்” என்ற சத்ததுடன் நின்றது அவள் வீட்டு புதிய டஸ்டர் கார். முதலில் இவள் என்று அறியாது செய்யப்பட்ட துடுக்குத்தனம் என்று நினைத்தாள், அடுத்த நொடியே அந்த சிந்தனையை மாற்றும் நிலை அவளுக்கு.

ரிஷி அந்த இளம் சாணி வண்ணத்தில் இருந்த புது டஸ்டர் காரின் ட்ரைவர் சீட்டில் இருந்து இறங்கி முன்னே நடந்து வந்தான். “அவனது முகத்தை நிலவொளியும் சாலையின் இரு மருங்கிலும் உயரத்தில் பளிச்சிட்ட சோடியம் விளக்குகளும் பளீரென்று இவளுக்கு காண்பிக்க, அந்த நேரத்தில் அவனைப் பார்த்ததும் மெல்லிய நடுக்கம் ஒன்று இவளுக்குள் வந்துபோனது, ஆயினும் அந்த அதிர்ச்சியை முக பாவனையில் எள் அளவேனும் காண்பிக்காது, தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவனைப்பார்த்தாள்.

வெகுநாள் வெட்டப்பாடாத முடிக்கற்றைகள் அவன் நெற்றி தொட்டு காற்றில் அலைந்து மெதுவாக நெற்றியில் படர்ந்தது, அவனது உயரத்திற்கு ஏற்ப செதுக்கிய சிலையாக உடல், வெள்ளை நிற டிஷர்ட்டும், ப்ளூ ஜீன்சிலும் எதிரே வந்து நின்றான். கண்களில் குறும்பும் இதழில் புன்னகையும் தவழ்ந்தது.

“அதான் ரோடு இவ்வளவு பெரிசா இருக்கே பின்ன ஏன் ப்ளாட்ஃபார்ம்ல வண்டி ஓட்டுறீங்க?” – காவ்யா

“ஹையோ, நான் ரோட்டில தான்மா ட்ரைவ் பன்னினேன் பட் உன்ன பார்த்த உடனே ஆட்டமாட்டிக்க அதுவே இந்தப்பக்கம் வந்துட்டு! – சிரித்தான், அது ஆளை மயக்கும் மந்தகாச புன்னகை, ஆனால் அதற்கெல்லாம் விழுந்து விடுபவளா காவ்யா!

மணிக்கட்டை உயர்த்தி மணிப்பார்த்தாள், கைப்பேசியை பார்த்தாள், “டாடிக்கு கால் பண்ணலாமா?” என்று அவள் யோசிக்கும்போதே, இவன் “அப்ப நாம கிளம்பளாமா பேபி?” என்றான் அவளை மேலிருந்து கீழ்வரை அளந்த ஓர் பார்வையோடு!

“உங்களுக்கு எதுக்கு சார் வீண் சிரமம், டாடி ட்ரைவர் அனுப்புவாங்க, அன்ட்டில் ஐ வில் வெயிட்! நீங்க போங்க உங்களுக்கு நிறைய வேலையிருக்கும்!” பேருக்கு சொன்னாளே தவிர முகத்தில் அப்படி ஒரு எகத்தாளம், [ ஏண்டா நீ கூப்பிட்டா அப்படியே உன் பின்னாடி வந்திருவேன்னு நினைப்பா] அவசரமாக ரோட்டின் ஓரம் வந்து காருக்கு வழிவிட்டாள். அவன் அதற்கெல்லாம் அசைபவனாக இல்லை, மெதுவாக நடந்து இவளருகே, வந்தான், இவள் இரண்டடி பின்னால் வைத்தாள், இனிமேல் நகர்ந்தால் சரிவில் கால்வைத்து கீழே விழ நேரிடும் மூளை எச்சரித்தது, அவளது அருகாமையில் வந்து நின்றவன், கைகளை நல்ல வேளையாக அவனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டிற்குள் விட்டு, ஒரு பெருமூச்சை விட்டான், “காவீ உங்கப்பா அனுப்பின ட்ரைவர் நான் தான், வேணும்னா, கால் செஞ்சு கேளு? இது உங்க வீட்டு டஸ்டர் தானே!” காரைக் கை காண்பித்தான், இவளுக்கு ஒரு நொடி திகைப்பு வந்து போனது, கைப்பேசி இப்போது சிணுங்க, அவளது அப்பாதான், எடுத்து காதிற்கு கொடுத்தாள், “இவள் வாயைத்திறக்கும் முன்னே, “காவீ, லேட் ஆயிடுச்சு, நான் ரிஷிய அனுப்பிருக்கேன் நீ அவனுக்கு கால் செஞ்சு அவன் கூட வந்திரு, டாடியும் மம்மியும் ஒரு வெட்டிங்காக ஹைட்ரபெட் கிளம்புறோம் உனக்கு தெரியும்ல, நீ நம்ம வீட்டுக்கு போ, இல்ல தர்ஷினியோட போய் இரு, உன்ன எங்க ட்ராப் பன்னனும்னு ரிஷிகிட்ட தெளிவா சொல்லு, காவீ கொஞ்சம் மரியாதையா பேசு!” இவள் ஏதோ சொல்ல வாயைத் திறக்கும் முன்னே அவர் இணைப்பைத் துண்டித்திருந்தார். இவளுக்கு சம்பந்தத்தின் வார்த்தையை மீறும் தைரியம் இது வரை வந்ததில்லை. நிமிர்ந்து இவனைப்பார்த்தாள், “வர்றீயா இல்லனா தூக்கிட்டுபோகவா?” என்பதுபோல் இருந்தது அவன் பார்வை, முன்னே சென்று கார் கதவைத்திறந்து விட்டான், மௌனமாக அவன் பின்னே சென்று, அவன் திறந்து விட்டக்கார் கதவின் வழியே உள்ளே ஏறி அமர்ந்தாள். “ஆடுடா நல்ல ஆடு, ஆனா உன் ஆட்டத்திற்கலெல்லாம் டாடி ஏன் சிங்க்சான் போடுறாருனு தான் இன்னும் தெரியல” இது அவள் மனம்.

ஒரு இனிய மனம் மனதை நனைத்தது, காரின் பின் சீட்டில் இருந்து ஒரு மலர்கொத்தை அவள் கைகளில் கொடுத்தான், தன்னை அறியாது வாங்கிக்கொண்டாள் அது செண்பக மலர்களும் தாளம் பூவும் இணைந்து தொடுத்த பூங்கொத்து, எளிதில் கிடைக்காத கைவேலைபாடுகளுடன் இருந்தது, காவ்யாவிற்கு மலர்கள் மிகவும் பிடிக்கும், வீடு முழுவதும் பூந்தொட்டியும், மலர்கொத்துக்களும் இருக்கும், அதன் மனத்தை நுகரும் தருணமெல்லாம் அவளுக்கு புத்துணர்வு வருவதாய் உணர்வாள். இப்போதும் அப்படியே மலர்களை பார்த்ததும் மனம் இளகத்தான் செய்தது, அப்படியே அருகிலிருப்பவன் மீது ஒரு சின்ன கரிசனம் வந்துபோனது. காவ்யா இயல்பிலேயே அதீத கற்பனைத்திறம் பெற்றவள், அழகியல் கலைகளில் ஆர்வமிக்கவள், அவள் கண் எதிரே நீட்டப்பட்ட மலர்க்கொத்தில் மனம் திழைத்தது, கொடுத்த கரம் எதுவாய் இருந்தால் என்ன?, கொடுக்கப்பட்டது அவளை அப்போது கவர்ந்தது.

“முன் கரத்தை நீட்டி அவளிடம், அந்த பூங்கொத்தை  நீட்டியவன், “ஹேப்பி டேட்டிங்க்” என்றான் புன்னகையுடன், இப்போது மலர்களிலிருந்து கண்களை உயர்த்தியவள், “ஹலோ ஒழுங்கா ட்ரைவர் வேலைய மட்டும் பார்த்தா நல்லது! இல்லனா வீட்டுக்கு போகும்போது நாலஞ்சு பல்லு இருக்காது!” இதை சொல்லும்போது சம்பந்தம் இவனிடம் மரியாதையாக பேசும்படி சொன்னது அனியாயத்திற்கு ஞாபகம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.