(Reading time: 31 - 61 minutes)

 

காதல், நாள் கிழமை பார்த்து, தேதி பார்த்து வருவதல்ல… பட்டென இதயம் நுழைந்து உயிரில் கலந்து, விழிகளில் தெறித்திடும் மின்னல்… அந்த மின்னொளி அவளின் விழிகளிலும் ஒருநாள் பிரதிபலிக்க, அர்னவ் நிலை கொள்ளாது துடித்தான்…

சரயூ நிச்சயதார்த்தம் அன்று ஜானவிக்கு துணையாய் அவளுடன் நடந்து வந்து, அவளை பஸ் ஏற்றி விட்டவன், அதன் பிறகு அவளுடன் பேச கடவுளே ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்தார்…

சரயூவிற்கு செய்த போன் காலை அர்னவ் எடுக்க, அதில் ஆரம்பித்தது அவர்களின் உரையாடல்..

எந்த ஆணிடமும் பேசாதவள், அவனிடம் பேசினாள் நேரம் காலம் தெரியாது…

நிதமும் அவன் அவளுக்கு போன் செய்வதை, உண்பது, உறங்குவது போலே அனிச்சை செயலாகவே கடைபிடித்தான்…

அவனின் நேரந்தவறாத அக்கறையில், அன்பில், திக்கு முக்காடி போனாள் ஜானவி…

இவ்வளவு அன்பை ஒரு ஆண், அதுவும் பழகிய இந்த ஓரே மாதத்தில் கொடுத்திட முடியுமா என வியந்து வியந்து மகிழ்ந்து போனாள் அவள்…

அவன் அவளை ஜானு என்று அழைத்ததே இல்லை… ஜானவி என்று ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் அழைக்க ஆரம்பித்தவன், பின் மெல்ல மெல்ல அவளை வேறொரு பெயர் சொல்லி அழைத்தான்…

அவனின் அந்த அழைப்பில் கரைந்து இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனாள் அவள்…

ஆண்பிள்ளை அவன், அவளிடத்தில், தன் நண்பர்களுடன் பேசுவது போல், என்னடா?... சொல்லுடா… என “டா….” சொல்லியே பெரும்பாலும் அழைத்திட, அவளிடம் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கங்கள் கூட ஓரிரு நாளில் சுத்தமாக மறைந்தே போனது…

அவளுக்கு அவன் ஒரு ஆத்மார்த்தமான உறவாகவே தெரிந்தான்… அதற்கு அவள் ஆரம்பத்தில் வைத்துக்கொண்ட பெயர் நட்பு…

உண்மைதான்… இருவரும் நட்பாகவே பழகினர்… காதல் என்ற ஒன்றே அவர்கள் இருவரின் உரையாடலிலும் வரவில்லை… அத்தனை அன்பாக ஒருவருக்கொருவர் இருந்த போதிலும்…

அவன் போன் செய்திட்டால் போதும்… முகத்தில் ஒரு கோடி மத்தாப்பு ஒளிர்ந்துவிடும் அவளுக்கு…

“கார்த்திக்….” என போனை எடுத்ததும் அவள் அழைக்கையில் தானாகவே அவனது இதழ்களில் புன்னகை உதித்துவிடும் அழகாய்….

“ம்ம்… என்னடா பண்ணுற?... சாப்பிட்டியாடா?...” என அவனும் விசாரிக்க ஆரம்பிக்க, அப்படியே போய்விடும் நேரமும் அவர்களுடன் இணைந்து…

இந்த விசாரிப்புகள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தவறாமல் நடக்கும்… பாதி மொபைல் சாட்டிங்கில்… மீதி பாதி போன் காலில்…

இரவு வேளையில் ஒரு மணி நேரம் குறைந்தது அவளிடம் பேசுவான்… 7 மணிக்கோ 8 மணிக்கோ ஆரம்பிக்கும் பேச்சு வார்த்தை முடிவதற்கு சரியாக 9 மணி ஆகிவிடும்…

அப்பொழுதும் போன் வைக்கப்போகும் தருவாயில், “சரிடா… நேரமாச்சு…. நீ போய் சாப்பிடு…” என உதடுகள் தான் சொல்லுமே தவிர, அவன் உள்ளம் சொல்லிடாது… அவளுக்கும் அதே கதி தான்…

எல்லாமே நலம் விசாரிப்புகளும்… அக்கறையான பேச்சுவார்த்தைகளுமாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அவளுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாது போக, தனக்கு முடியவில்லை என அவள் அவனிடத்தில் தெரியப்படுத்தியும் இருந்தாள்…

அவள் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு அதற்குமேலும் அவளிடத்தில் பேசாமல் இருக்க முடியாது என்று தோன்றிவிட, அவளுக்கு போன் செய்தான்… அந்த நேரம் அவள் யாருடனோ பேசிக்கொண்டிருக்க, அவனும் இரண்டு மூன்று தடவை அழைத்தான்… அதனை கவனித்தும் அவள் பேசிமுடித்துவிட்டே அவனுக்கு போன் செய்ய, அவன் எடுக்கவில்லை…

இரண்டு மூன்று அழைப்புகளுக்கு பிறகு எடுத்ததும், அவள் தனது மன்னிப்பை அவனிடம் கேட்க, “சாப்பிட்டியா?.. உடம்புக்கு பரவாயில்லையா?..” எனக் கேட்டான் அவன்…

“இல்ல கார்த்திக்… சாரி……” என அவள் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைய, அவன் “சரிடா… நேரமாச்சு.. சாப்பிட்டு தூங்கு சரியா?...” என கேட்டுவிட்டு அவள் பதில் சொன்னதும் வைத்துவிட்டான்…

இரவு, படுக்க போகும் முன், சாரி கேட்டு மெசேஜ் அனுப்பியதற்கு அதெல்லாம் எதுமில்லடா நீ தூங்கு குட்நைட் என்று பதிலளித்துவிட்டு யோசித்துக்கொண்டிருந்தான் அவன்… இங்கே அவளோ தான் செய்த தவறை எண்ணி வருந்திக்கொண்டிருந்தாள்…

மறுநாள் விடிந்ததும், அவனிடம் பேசினாள்… வழக்கமான அவனது பேச்சுவார்த்தையாக அது இல்லாதிருந்தது மனதிற்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது அவளுக்கு… கடைசியில் ஒருவழியாக மாலை வேளையில், அவனிடம் தன் அழுகையை அவள் வெளிப்படுத்த, “நீ ஒருவார்த்தை போன்ல எதுக்கு போன் பண்ணுறேன்னு கேட்டிருக்கலாம் தானடா… போன் பண்ணிட்டே இருந்தேன்…. கால் வெயிட்டிங்க் வந்துட்டே இருந்துச்சு… ஒரு வார்த்தை உங்கிட்ட பேசணும்னு தான் போனே பண்ணினேன்… ஆனா நீ போனே எடுக்கலை.. அப்பதான் யோசிச்சேன் இவ்வளவு நேரம் போன்ல நீ பேசிட்டிருக்குறன்னா, கண்டிப்பா உனக்கு உடம்பு சரி ஆகியிருக்கும்னு நினைச்சு மனசை தேத்திகிட்டேண்டா… நீ சரி ஆனதே போதும்னு தோணிருச்சுடா…. நீ இப்போ நல்லா இருக்குறல்லடா?...” என ஆதங்கத்தையும் மனதையும் வெளிப்படுத்தியவன், கடைசியில் தன் அக்கறை கலந்த பயத்தையும் வெளிப்படுத்த, அவள் உடைந்தே போனாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.