(Reading time: 31 - 61 minutes)

சித்தி போன் பண்ணினாங்க… அப்புறம் தாத்தா பேசினாங்க… மாத்தி மாத்தி பேசிட்டே இருந்தாங்க… உங்க போனும் வந்துச்சு இடையில… அவங்க போனை கட் பண்ணிட்டு உங்ககிட்ட பேசினாலும் அவங்க கூப்பிடுவாங்க… உங்க கிட்ட பேசிட்டிருக்கும்போது எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாம நல்லா பேசணும்னு நினைச்சேன் கார்த்திக்… அதான் அவங்ககிட்ட எல்லாம் பேசி முடிச்சிட்டு கூப்பிடலாம்னு நேரம் சீக்கிரம் போகணும்னு கடிகாரத்தை பார்த்துட்டே இருந்தேன்… ஆனா நான் பண்ணினது கடைசியில தப்பா போச்சு… நீங்க சொன்ன மாதிரி ஒருவார்த்தை பேசியிருக்கலாம் உங்ககிட்ட… நான் அப்புறம் பேசுறேன் அப்படின்னாவது சொல்லியிருக்கலாம்… ஆனா அந்த ஒருவார்த்தை கூட உங்ககிட்ட நான் எந்த தொந்தரவும் இல்லாம சொல்லணும்னு நினைச்சேன் கார்த்திக்… இப்போ அதுதான் தப்பா போச்சு… சாரி கார்த்தி.... நிஜமா சாரி… நீங்க எவ்வளவு ஹர்ட் ஆகியிருப்பீங்கன்னு நல்லாவே புரியுது… என்னை மன்னிச்சிடுங்க…” என சொல்லி விசும்பியவளை சமாதானம் செய்தான் அவன்…

“சாரி கார்த்திக்….” என ஓயாமல் சொல்லி அழ ஆரம்பித்தவளை, “என் சகில்ல… ப்ளீஸ்டா… நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா… ப்ளீஸ்… எனக்கும் அழுகை வந்துடும்டா… சொன்னாக்கேளுடா… அழாதடா சகி… நீ எந்த தப்பும் பண்ணலை…” என அவன் தேற்ற, அவள் அவனின் சகி என்ற அழைப்பில் கொஞ்சம் தெளிந்தாள்…

ஆம்… அவனுக்கு அவள் சகி… எங்கேயோ ஆரம்பித்து எப்படியோ பேச ஆரம்பித்த அவர்களின் நட்புக்கு ஆதாரமாய் அவளுக்கு அவன் வைத்த பெயர் சகி… அவனின் நெருங்கிய தோழியாக மாறிப்போனவளை நொடிக்கு நொடி அவன் அவ்வாறே அழைக்க, அவளுக்கோ அவனுடனான இந்த நட்பு என்றைக்கும் முறியாமல் தொடர்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து போனது நெஞ்சில்…

சரயூ திருமணம் முடிந்ததும், சரயூவுடன், இருவரும் கான்ஃப்ரென்ஸ் கால் பேசும்பொழுதெல்லாம், சரயூ ஜானவியை எதாவது சொன்னால் கூட, வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நிற்பான் அவன்…

சரயூவிற்கு அர்னவின் இந்த மாற்றம் சற்றே ஆச்சரியமாக இருந்தாலும், அவன் மனதில் அவள் தோழியாக, அதுவும் நல்ல தோழியாக பதிந்திருக்கிறாள் என புரிந்தது… அதற்கு அடுத்த நிலையில் அவளும் அவர்கள் இருவரையும் வைத்துப் பார்க்கவில்லை…

காலேஜ் முதல் வருடத்தில் ஆரம்பித்த அவர்களின் நட்பு, எழு வருடங்கள் வரையிலும் அப்படியே தான் இருந்தது… அவர்கள் இருவருக்குள்ளுமே நட்பையும் தாண்டிய ஒரு நிலை வரவில்லை… ஆனால் அது ஜானவிக்கு விரைவிலேயே வந்தது, அர்னவும் அதனை உணர்ந்து கொள்ளவில்லை....

அவளுக்கே அது தெரியாத பட்சத்தில், அவனுக்கு எவ்வாறு அது தெரிந்திருக்க முடியும்?...

கொஞ்சம் கொஞ்சமாக எப்போதென்றே தெரியாமல், அவளின் மனதினுள் வந்து நிரம்பியிருந்தான் அர்னவ்…

அந்நிலையில் ஒருநாள், அவள் போன் ரிப்பேர் ஆகிவிட, அப்பாவின் போனிலிருந்து, அவனுக்கு தகவல் சொன்னாள் இன்னும் கொஞ்ச நாள் பேச முடியாதென…

“என்னடா… இப்படி சொல்லுற?... அப்போ ஆஃபீஸ் டைம் பேச முடியாதா?...”

“ஆமாம்மா… பேச முடியாது… நான் ஈவ்னிங்க் வந்ததும் பேசுறேன் சரியா… மார்னிங்க் பேச முடியுமான்னு தெரியலை… அப்பா திட்டுவாங்க… பட் கண்டிப்பா வொர்க் முடிஞ்சு நைட் வீட்டுக்கு வந்ததும் பேசுறேன்ம்மா… சரியா…”

“இல்லடா… நீ இல்லாம கஷ்டம்டா… நீ வந்துடு…”

“கார்த்தி… வரணும்னு எனக்கும் ஆசைதான்… ஆனா போன் இல்லாம முடியாதும்மா…”

“புரியுதுடா… ஆனா நீ இல்லாம எப்படிடா?....” என குரல் கம்ம அவன் பேசியதும்,

“ப்ளீஸ் கார்த்தி… இப்படி எல்லாம் பேசாதீங்க… எனக்கு அழுகையா வருது…” என்றவள் அழ ஆரம்பித்தாள்…

“ஹே… சகி…. என்னடா இது?...  நீ இல்லாம கஷ்டமா இருக்கும்னு தான சொன்னேன்… அதுக்கு ஏன் அழற நீ?...”

“நீங்க கஷ்டப்பட்டா எனக்கு அழுகை தான் வரும்….”

“அய்யோ சகி… ஹ்ம்ம்… சரி… ப்ளீஸ் அழாத… நீ அழக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல…”

“ம்ம்…”

“சிரிச்சிட்டே இருக்கணும் சரியா?... என் சகி எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்…”

“சரி… சிரிக்குறேன்… பட் அதே மாதிரி என் கார்த்தியும் கஷ்டப்படக்கூடாது… எப்பவும் சந்தோஷமா இருக்கணும்… இதுதான் அவரோட சகிக்கும் வேணும்…”

“கண்டிப்பாடா சகி…” என அவனும் சிரிக்க, இங்கே அவளும் நிறைவாக புன்னகைத்தாள்…

ஆனால் அவனிடம் சிரித்துவிட்டு, பகல் முழுவதும் போன் இல்லாமல், பேசாமல் இருக்க அவள் படாதபாடு பட்டாள்…

அவன் இல்லாத இடத்தினை நிரப்ப அவளுக்கு ஏனோ முடியவில்லை… எப்போதடா சாயங்காலம் வரும் என எதிர்பார்த்து காத்திருப்பவள், வீட்டிற்கு வந்ததும்,

“கார்த்தி….. ஐ மிஸ் யூ சோ மச்…………….” என்பாள்…

“நானும்தாண்டா சகி… ஐ மிஸ் யூ அ லாட்….” என அவனும் சொல்ல, அதன் பின் நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும்…

ஏழு வருடத்தில் புரிந்து கொள்ளாத உறவை அதன் பின் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள் அவள்…

அதன் பின்னரும், அவனிடம் பேசாத நிமிடங்கள் அவளை கொல்லாமல் கொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்குள் வந்திருந்தான் அர்னவ்…

அவளது போக்கு அவளுக்குக்கே வித்தியாசமாய் தெரிய, தன் மனம் அர்னவை வேறு விதமாக பார்ப்பதை உணர்ந்தாள் அவள்..

அதிர்ச்சியில் உறைந்தவள், அவனிடம் பேசாமலே இருந்துவிட்டாள் ஒருமாத காலம் வரை…

அவனும் அவளிடம் பேச முயற்சித்தான் ஒருவார காலம் வரை… பின் என்ன நினைத்தானோ, அவளுக்கு பேச பிடிக்கவில்லை போல என்றெண்ணிக்கொண்டு மௌனம் சாதித்தான் அவன், மனதினுள் அவளிடம் பேசாத வலியை மறைத்து பொறுத்துக்கொண்டு…

ஒரு மாதத்திற்கு பின் வந்தவள், அவனிடம் பேசினாள்… அவனும் பேசினான்… ஆனால் ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது அவளுக்கு… அது அவள் பேசாமல் இருந்த இந்த ஒருமாத கால பிரிவு ஏற்படுத்தியிருந்த தடங்கள் என்பதனை அவள் பின்னர் புரிந்து கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.