சிறுகதை - கண்ணிலே என்ன உண்டு? - பிந்து வினோத்
அப்பார்ட்மென்ட் வாயிலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய சௌபர்ணிகா, ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு, பெட்டியுடன் உள்ளே வந்தாள்.
வாசல் கிரில் தட்டப் படும் ஓசைக் கேட்டு எட்டி பார்த்த கோமதி, சௌபர்ணிகாவை பார்த்து முகம் மலர்ந்தாள்.
“வா சௌபி, உன்னை இன்னமும் காணுமேன்னு நினைச்சிட்டே இருந்தேன்...”
“வழியில ஒரே டிராஃபிக் சித்தி...”
“ஆமாம் சென்னையில எது இருக்கோ இல்லையோ ட்ராப்பிக்கிற்கு ஒரு குறைச்சலும் இல்லை... அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்காங்க... இந்தாங்க இதெல்லாம் உங்களுக்கும் சித்தப்பாவிற்கும் ஸ்பெஷலா அம்மா தந்தது... இது அபிக்கு...”
“அட அதிரசமா? உங்க அம்மாக்கு இன்னும் இதெல்லாம் நினைவிருக்கு பாரு...”
“அவங்க செய்வதை விரும்பி சாப்பிடும் யாரையும் அம்மா மறக்க மாட்டாங்க சித்தி...” கண்சிமிட்டலுடன் சொல்லி சிரித்தவள்,
“ஆமாம் சித்தப்பா ஆபிசுக்கு போயாச்சா?”
“ஆமாம்... நீ வந்த உடனே போன் செய்ய சொன்னார்... நான் அவருக்கு இன்பார்ம் செய்திடுறேன்... அபி வர நாலரை மணி ஆகும்...”
“ஓ!”
“நீ நாளைக்கு தானே போகனும்? இன்னைக்கு ரெஸ்ட் எடு... போர் அடித்தால் படுத்து தூங்கு...”