(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

கீழே கிடந்த வீட்டுக்காரியை, ராக்கம்மா தூக்கி நிறுத்த முயற்சி செய்த போது, தரையில் தேய்த்ததால் சிராய்ப்பாகி, மரத்தின் பட்டையைக் கீறினால், செக்கச் செவேலென்று வரும் மரச்சதை மாதிரி ஆயாவின் சதைப் பகுதியில் ரத்தம் கசிந்தது. ஆயா அதை கையால் பிதுக்கிப் பார்த்துக் கொண்டே மௌனமாகப் பார்த்தாள்.

இதற்குள் சத்தங்கேட்டு, மல்லிகா உட்பட எல்லோரும் வந்தார்கள். ரமணன் அக்காவை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீட்டுக்காரி, பிரளயப் புலம்பலை பிரசவித்தாள்.

பிளான்போட்டாடி வந்திங்க? என்னை கை நீட்டியாடி அடிச்சே... அடிச்ச கையில... காப்பு மாட்டுறேனா... இல்லியான்னு பாரு. ஒரு அடிக்கு... ஒன்பது அடி வாங்கித் தராட்டால்... என் பேரு... என்... பேரு...”

வீட்டுக்காரி, தன் பெயரையே ஞாபகப்படுத்த முடியாமல் திணறிவிட்டு, பிறகு “ஏ... ரமணா... போலீஸுக்கு... போன் பண்ணிட்டு வாடா... இன்னுமாடா நிக்கே... எருமை மாடு...” என்றாள்.

ரமணன் வெளியே ஓடினான். ராக்கம்மா, வீட்டுக்காரியை பயந்தவள் மாதிரியும், பயப்படுத்துபவள் மாதிரியும் பார்த்துக் கொண்டிருந்த போது, மல்லிகா, ஆயாவின் குருதி படர்ந்த கால் பகுதியை, கைக்குட்டையால் துடைத்து விட்டு, அக்காள் சந்திராவைப் பார்த்த போது, அவள் வீட்டுக்குள் போய், தேங்காய் எண்ணெய் கொண்டு வந்தாள். மல்லிகா, எண்ணெயை ஊற்றி, ஆயாவின் காலில் தேய்த்தாள். கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் ‘குண்டு’க்குக் கொடுத்து விட்டு, கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக, அன்பின் பரிச்சயம் கிடைத்தாலும், அதன் அரவணைப்புக் கிடைக்காமல், உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்த ஆயா, மல்லிகாவின் அன்பில் நெகிழ்ந்து குழைந்து மேனியெங்கும் பரவசமாக, ஆனந்தமும், சோகமும் மறைந்து, அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஞானிகளின் குறிக்கோள் போல் தோன்றும் அடையாளம் கண்டாலும் காட்ட முடியாத ஒரு பேருணர்வு ஆட்கொள்ளப் பட்டவளாய், ஆயா விம்மினாள். தன்னையறியாமலே, வீட்டுக்காரருக்குக் கூட நன்றி சொல்லிக் கொண்டாள்.

இதற்குள், ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் கீழே இருந்த ஸ்டவ்வை எடுத்து திண்ணையில் வைத்தார்கள். இட்லி தட்டை ஒழுங்கு படுத்தி வைத்தார்கள். ‘கோணிக் கதவை’ கட்டி முடித்தார்கள்.

வீட்டுக்காரி, அவளைத் தடுக்கப் போனாள். கந்தசாமியின் மனைவி “இனிமே... கொலை விழுண்டி” என்று அதட்டிய போது, வீட்டுக்காரி தெருவுக்கே வந்து, போலீஸ்காரர்களை எதிர்பார்த்து நின்றாள். தெருவெங்கும் கூட்டம்.

போலீஸ் வந்தது. ‘வானோடு’ வந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.