(Reading time: 15 - 30 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 25 - நா. பார்த்தசாரதி

  

ன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி எவ்வளவோ முயன்று பார்த்தும் காமாட்சியம்மாளிடமிருந்து சாதகமான மறுமொழியையோ சுமுகமான வார்த்தைகளையோ பதிலாகப் பெற முடியவில்லை. ஒரே முரண்டாக இருந்தாள் காமாட்சியம்மாள். உடல்நிலை சரியாயிருக்கிற காலங்களில் சூரியோதயத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்குப் போய்விட்டுத் திரும்புவதைத் தவிர வெளியில் எங்கும் நடமாடாத காமாட்சியம்மாளுக்கு எல்லா விவரமும் முன்கூட்டியே எப்படித் தெரிகிறதென்பது பெரிய புதிராயிருந்தது. பார்வதியை விசாரித்ததில் அந்தப் புதிர் விடுபட்டது. பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டி திரிலோக சஞ்சாரி போல் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் எங்கே யார் வீட்டில் என்ன நடக்கிறதென்று ஊர் வம்புகளைத் தெரிந்து கொண்டு வந்து அம்மாவுக்குச் சகலத்தையும் அவ்வப்போது காதில் போட்டுக் கொண்டிருப்பதாகப் பார்வதி வசந்தியிடம் தெரிவித்தாள்.

   

"புருஷா ஆயிரம் தப்புப் பண்ணலாம். பொம்மனாட்டி மட்டும் முரண்டு பண்ணி மூஞ்சியைத் தூக்கிண்டு நின்னாள்னா அப்புறம் தனியா அவா எதைச் சாதிச்சுட முடியும்?" - என்பதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி அடிக்கடி காமாட்சியம்மாளிடம் சொல்லும் வாக்கியம் என்பதைக் கூடப் பார்வதியே தெரிவித்தாள்.

   

முரண்டும், அறியாமையும், அசூயையும், கொண்டது விடாக் குணமுள்ள சில பாட்டிகள் தான் கிராமங்களின் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ என்று எண்ணினாள் வசந்தி. நிச்சயமான கல்யாணங்களைக் கலைப்பது, நெருங்கிப் பழகுகிறவர்களிடையே மனஸ்தாபங்களை உண்டாக்குவது, மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொள்வது, வதந்திகளைப் பரப்புவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது இவையெல்லாம் ஒவ்வோர் கிராமத்திலும் சில பாட்டிகளின் செயல்களாக இருந்தன. இந்த மாதிரிக் கெட்ட குணமுள்ள பாட்டிகளின் செயல்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நல்ல சுபாவமுள்ள சில பாட்டிகள் கூட ஒதுங்கி இருந்து விடுவது வழக்கமாயிருந்தது. காமாட்சியம்மாளிடம் தான் பேசிப் பார்த்ததைப் பற்றி சர்மாவிடமும், தன் தந்தையிடமும் விவரங்களைத் தெரிவித்து விட்டாள் வசந்தி. தான் காமாட்சியம்மாளிடம் பேசியதைப் பற்றிக் கமலியிடமோ, ரவியிடமோ, வசந்தி எதையும் விவரிக்கவில்லை. வீணாக அவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று தான் அதை விட்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.