(Reading time: 17 - 33 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

பொருட்படுத்தாமலுமே ரவிக்கும் கமலிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் என்று அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து காமாட்சியம்மாள் மீளவே இல்லை. அன்றிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். சர்மாவையோ மற்றவர்களையோ பொருட்படுத்தக் கூடாதென்ற முரண்டில் தன் பிறந்தகத்து ஊருக்குக் குமாரைப் பஸ்ஸில் புறப்பட்டுப் போகச் சொல்லி முன்பு சங்கரமங்கலத்தில் பிரம்மோத்ஸவ சமயத்தில் வந்து தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் சர்மாவுடன் கோபித்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய்த் தங்கிய தன் பெரியம்மாப் பாட்டியை அழைத்து வரச் செய்திருந்தாள் காமாட்சியம்மாள். கமலியே வேணு மாமா வீட்டுக்குப் போயிருந்ததனால் பாட்டி தன்னோடு வீட்டில் தங்க ஆட்சேபணை எதுவும் இராதென்று எண்ணித்தான் காமாட்சியம்மாள் அவளை வரவழைத்திருந்தாள். பத்து அரைத்துப் போடுவதற்கென்றும் நாட்டு வைத்தியம் சொல்வதற்கென்றும் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி வேறு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.

   

'அப்பாவைப் பற்றியோ, ரவி அண்ணாவைப் பற்றியோ, கமலியைப் பற்றியோ, பேசினாலே அம்மா எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள் - அவளுக்கு, அதனால் உடம்புக்கு அதிகமாகி விடுகிறது' என்று தெரிந்து குமாரும் பாருவும் அவர்களைப் பற்றியெல்லாம் அம்மாவிடம் பிரஸ்தாபிப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். கூப்பாடுகளும் வெளிப்படையான சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் வீட்டில் சண்டையின் அறிகுறியான ஒரு வேண்டத்தகாத அமைதி தொடர்ந்து நிலவிக் கொண்டுதானிருந்தது.

   

ஒத்தாசைக்காகக் குமார் பெரியம்மாவைக் கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்ட தினத்தன்று மாலையிலேயே அந்தப் பெரியம்மா காமாட்சியம்மாளிடம் தற்செயலாகக் கமலியைப் பற்றி விசாரித்திருந்தாள்.

   

"ஏண்டீ காமு! இந்தாத்திலே மின்னே நா வந்திருக்கிறப்போ ஒரு வெள்ளைக்காரி உன் புள்ளையோட வந்து தங்கியிருந்தாளே அவ எங்கேடீ? ஊருக்குத் திரும்பிப் புறப்பட்டுப் போயிட்டாளா? அவளாப் போனாளா இல்லை நீங்களே போகச் சொல்லிட்டேளா?"

   

காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதிலே சொல்லவில்லை. ஒன்றுமே காதில் வாங்கிக் கொள்ளாதது போலப் பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் கிழவி விடுகிற வழியாயில்லை. தொணதொணத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.