(Reading time: 17 - 33 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

மாமாவும் பரஸ்பரம் வேண்டியவர்களைப் பார்த்துக் கலியாணத்திற்கு அழைப்பதும் பத்திரிகை கொடுப்பதுமாக இருந்தனர். கோர்ட்டைப் பற்றியோ கேஸைப் பற்றியோ, தீர்ப்பைப் பற்றியோ கவலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சென்னையிலிருந்து ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர் இந்த விநோதமான கலியாணத்தை - நான்கு நாளும் ஒரு நிகழ்ச்சி கூட விடாமல் புகைப்படம் எடுக்க வரலாமா என்று அனுமதி கேட்டு எழுதியிருந்தார். 'ஆட்சேபணையில்லை; வரலாம்' - என்று பதில் எழுதியவுடன், அந்தப் பத்திரிகையாசிரியருக்கு ஒரு திருமண அழைப்பிதழையும் தபாலில் அனுப்பி வைத்தார் வேணு மாமா. தினசரிப் பத்திரிகைகளில் கோர்ட் செய்தியும், கேஸ் நடப்பது பற்றிய செய்தியும், போதாதென்று ஒரு பிராம்மண இளைஞருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரக் கோடீசுவரரின் மகளுக்கும் சாஸ்திர முறைப்படி, நான்கு நாள் நடக்கப் போகும் திருமணம் பற்றிய செய்தியும் பளிச்சென்று வெளி வந்து தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு பரபரப்பான செய்தியாகிப் பரவிவிட்டதால் எங்கும் அதைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது.

   

சர்மா இறைமுடிமணிக்குக் கலியாணப் பத்திரிகை கொடுக்க அவருடைய விறகுக்கடைக்குப் போனபோது, அவர் அப்போது தான் கிடைத்த தமது இயக்க நாளேடான 'சீர்திருத்தச் செய்தி'யைத் தபாலிலிருந்து தனியே பிரித்து எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். 'சீர்த்திருத்தச் செய்தி' ஒரே பிரதிதான் தபாலில் சங்கரமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக அதற்குச் சந்தாக்கட்டி அதை விடாமல் வரவழைத்துக் கொண்டிருந்தார் இறைமுடிமணி. அதிகம் கடைகளுக்கோ நியூஸ் ஸ்டால்களுக்கோ வந்து தொங்காத தினசரி அது. அதிலும் அந்த அதிசயத் திருமணத்தைப் பற்றி அக்ரகாரத்திலும் ஓர் அதிசயம் - என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகியிருந்தது. இறைமுடிமணி, சிரித்தபடியே அதை சர்மாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சர்மா அதைப் படித்துவிட்டு இறைமுடிமணியிடமே திருப்பிக் கொடுத்தார். திருமண அழைப்பிதழை வாங்கிக் கொண்ட இறைமுடிமணி, "வேறே ஒரு கோர்ட்டில் சீமாவையர் எங்க மேலே போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. அந்த பொண்ணு மலர்க்கொடியை உங்க சீமாவையரு கையிலேருந்து காப்பாத்துறதுக்காக அவரு மாந்தோப்பில் நாங்க நுழையப் போக தோப்பிலே திருட நுழைஞ்சதாக எங்க மேலே கேஸ் போட்டுக் கோர்ட்டிலே நடக்குது விசுவேசுவரன்! நானும் எங்க ஆளுங்களும் ஜெயிலுக்குப் போயிடணும்னு சீமாவையருக்கு கொள்ளை ஆசைப்பா. அவரு ஆசைப்படி நடந்து நான் ஜெயிலுக்குப் போகாமே வெளியிலே இருந்தேன்னாக் கலியாணத்துக்குக் கட்டாயமா வர்றேன்ப்பா" என்றார்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.