"நான் ஏன் இதைச் சாக்காக வைத்துக் கொண்டு போய் விடக் கூடாது?" வெளியே புறப்பட்டுப் போனான். திரும்பி வந்தான். பையில் கொஞ்சம் துணிமணிகள். அவ்வளவுதான்.
அவன் எங்கே போனாலும்,எப்போ வந்தாலும் அவள் அதிகமாகக் கேள்விகள் கேட்பது வழக்கமில்லை. "எங்கேயாவது போவார்" என்று நினைத்துக் கொள்வாள். அப்படியே அன்று சாப்பிட்ட பிறகு கிளம்பினான். ஊஞ்சலில் தூங்கும் மனைவியை ஆசை தீரப் பார்த்தான். ஆறேழு வருஷங்களாக அறிமுகமான ஒருத்தரைப் பிரிந்து போகிற அளவே அவனுள் ஒரு ஏக்கம் எழுந்தது. அவளிடம் ஒரு மரியாதை, பக்தி ஏற்பட்டது இன்றுவரை இவள் என்னுடையவள் என்கிற பெருமை ஏற்பட்டது.
கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு வாசற் கதவை லேசாகத் திறந்துகொண்டு வெளியே வந்தான். பக்கத்து வீட்டில் பூரணி பிறந்த வீட்டிலிருந்து மற்றொரு குழந்தையுடன் வண்டியில் வந்து இறங்கினாள். இவனைத் திரும்பிப் பார்த்தாள். பாலுவிடம் குழந்தையைக் கொடுத்தாள். இருவரும் உள்ளே போய்விட்டார்கள்.
அவன் தெருவில் இறங்கி ரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தான்.
நர்மதா விழித்தபிறகு வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டாள்.
பக்கத்து வீட்டில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. பார்க்கப் போனாள். முதல் குழந்தையை விட இது நன்றாக இருந்தது.
"எப்படி இருக்கேடி நர்மதா” என்று கேட்டாள் பூரணி.
"அப்படியே தான் இருக்கேன்"
"நீ எப்பப் பாத்தாலும் கதவை அடைச்சுண்டு கிடக்கிற யாமே... இவர் சொன்னார்".
"பின்னே என்ன பண்றது? எங்காத்துகாரர் வீட்டிலேயே தங்கறதில்லை. ஒண்டியா வாசக்கதவை