திறந்து வச்சுண்டு உக்கார முடியுமா?"
"வாஸ்தவம் தான். கண்டவா உள்ளே வந்துட்டா?"
நர்மதா திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் இவளைக் கவனிக்காமல் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
"நான் போயிட்டு வரேன்."
"அப்பப்ப வந்துண்டு போயிண்டிரு..."
"பார்ப்போம் "
இருவரிடமும் முதலில் இருந்த நட்பின் ஆழம் குறைந்து ஏனோ தானோவென்றே பேச்சு நடந்தது.
மாலை வந்தது. விளக்கேற்றியாயிற்று. வாசலுக்கும் உள்ளுக்குமாகப் பலதடவைகள் அலைந்தாள். இரவும் வந்தது தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது.
மறுநாள். அதற்கடுத்த நாள். நாலு நாளைக்கு மேல் ஆயிற்று. பூரணியைத் தேடிப் போனாள்.
"என்ன நர்மதா இப்படி இளைச்சுப் போயிட்டே. பட்டப்பா எங்கே காணோம். "
''நாலு நாளுக்கு மேலே ஆச்சு. ஒரு தகவலும் தெரியலை"
"நான் வந்தன்னைக்கு பை நிறைய சலவைத் துணியா பளிச்சுன்னு எடுத்துண்டு கிளம்பிப் போனாரே. எங்கேயாவது ஊருக்குப் போறாராக்கும்னு பார்த்தேன். நாலு நாளாய்த் தனியாவா இருந்தே? நீ ரொம்பவும் மாறிப் போயிட்டே. மனசை விட்டு எங்கிட்டே இப்பவெல்லாம் பேசறதில்லை... வரதில்லை"