சம்பகம் தன் துர்ப்பாக்கியத்தை நினைத்து மனம் கலங்கினாள். தனிமையில் கண்ணீர் வடித்தாள். ராமனைப் பிரிந்த சீதா தேவியைப் போல் சோகமே உருவாக இருந்தாள். குழந்தை பானுவுக்காகவே தான் ஜீவித்திருக்க வேண்டும் என்று அவள் அடிக்கடி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள்.
சம்பகம் பிறந்த வீடு வந்து நான்கு மாதங்கள் ஆயின. அங்கிருந்து யாரும் அவளை மறுபடியும் வரும்படியோ, அவள் க்ஷேமத்தை விசாரித்தோ ஒரு வரி கூட எழுதவில்லை. மாமனார் மனம் நோகக் கூடாதென்று அவள் எவ்வளவு பணிவிடை செய்திருப்பாள்? மாமியாரின் கடும் சொற்களை எவ்வளவு தாங்கியிருப்பாள்? நாத்தனாரின் முகம் கோணாமல் அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? எல்லாவற்றிற்கும் மேலாக சங்கரனிடம் வைத்திருந்த பிரியமும் அன்பும் கூட அல்லவா மறைந்து போய்விட்டன! மைத்துனன் என்று எண்ணாமல் உடன்பிறந்த சகோதரனைப் போல அல்லவா அவனிடம் அன்பு பூண்டிருந்தாள்! இன்று அவளைப் பற்றி யாரும் அந்த வீட்டில் நினைப்பவர் சாட்சியாக இல்லை. அக்கினி மணந்து 'வாழ்வின் சுகதுக்கங்களில் உன்னைக் கைவிடேன்' என்று சத்தியம் செய்தவனே அவளை மறந்தபோது, மற்ற உறவினர் மறந்து போனது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமில்லை அல்லவா?
சம்பகம் தமையன் கூறிய ஆலோசனைப்படி நடக்கச் சித்தமாகத்தான் இருந்தாள். இருந்தாலும், ஒரு நாள் இல்லாவிடில் ஒருநாள் தனக்கு விடிவு காலம் கிட்டுமென்று நம்பியிருந்ததால், மறுபடியும் கணவன் வீட்டிற்கே போய் அங்கு இருப்பவர்களிடையே வசிக்க வேண்டும் என்கிறஆசை ஏற்பட்டது அவளுக்கு. தன் கருத்தைத் தமையனிடமும், மதனியிடமும் வெளியிட்டபோது, அவர்கள் வெறும் 'உபசாரத்துக்காக முதலில் அவளை அனுப்ப மறுத்தார்கள்.
"அங்கே போய் என்ன செய்யப் போகிறாய் சம்பகம்?" என்று தமையன் நிஷ்டூரமாகவே கேட்டான்.
'இல்லை அண்ணா! நான் இருக்க வேண்டிய இடம் அது தானே? உன்னையும், குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலினால் வந்தேன். பார்த்தாகி விட்டது. கொழுந்தன் கல்யாணத்துக்குக்கூட இராமல் வந்து விட்டேன. அந்தக் கோபம்தான் போல் இருக்கிறது, அவர்கள் கடிதம்கூடப் போடவில்லை" என்று கணவன் வீட்டாரை விட்டுக்