"நான் எதற்காக அப்பா வருத்தப்பட வேண்டும்? என்னவோ வாய்ப்பேச்சாகச் சொல்லி விட்டுப் போனார். நாம்தான் அதை நிஜம் என்று நம்பிவிட்டோம்" என்றாள் மலர்ந்த முகத்துடன் காமு.
ஆனால், ராமபத்திரய்யரின் மனதுக்குச் சாந்தி கிடைக்கவில்லை இந்த ஏமாற்றமும் அவருக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்றிலிருந்து அவர் சித்தப் பிரமை பிடித்தவர் மாதிரி தமக்குத் தாமே பேசிக் கொள்வதும், சிரிப்பதும் வழக்கமாகி விட்டது.
---
கல்யாணம் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் வரையில் நீலா புக்ககம் வரவில்லை. காலேஜில் சேர வேண்டும் என்று தகப்பனாரிடம் கேட்டுப் பார்த்தாள். "இனிமேல் உன் புருஷன் வீட்டு மனுஷர்கள் சொல்லுகிற மாதிரிதான் கேட்க வேண்டும்" என்று கூறி விட்டார் அவர். மாலை சரியாக ஐந்து மணிக்குத் தன் வீட்டுக் காரை சங்கரனுக்காக அனுப்பி வைப்பாள். அதில் இருவரும் உட்கார்ந்து வெளியே உலாவப் போய் விட்டு வருவார்கள். அவள் மட்டும் மாமியார் வீட்டிற்கு என்று வந்து சாதாரணமாக ஒருவருட னும் பேசுவதில்லை. சங்கரன் தினம் அவள் வீட்டிற்குப் போய் வரவேண்டும்!
''மகாராணி மாதிரி அவள் அங்கே இருந்து உத்தரவு போடுவது. இவன் அதைக் கேட்டுகொண்டு ஆடுவது!" என்று ஏதாவது மீனாட்சி முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.
"வீட்டில் நாலு பேர் கல்யாணம் விசாரிக்க வருகிறார் கள். பத்து நாளைக்கு நீலாவை இங்கே விட்டு வையுங்கள்" என்று மீனாட்சி அம்மாள் சம்பந்தி அம்மாளிடம் கேட்டுக் கொண்டாள்.
"அவள் யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். நீங்களே கேட்டுப் பாருங்கள்' என்று கூறிவிட்டாள் அந்த அம்மாள்.
"கல்யாணம் விசாரிக்க வருகிறவர்கள் எதிரில் நான் என்ன கொலு பொம்மை மாதிரி நிற்க வேண்டுமா?' என்று ஒருவித அலட்சியத்துடன் கூறிவிட்டுத் தாயுடன் காரில் போய் ஏறிக் கொண்டாள் நீலா.