சாப்பாடு முடிந்து கூடத்துக்கு வந்ததும் அங்கே நின்ற காமுவைப் பார்த்து கமலா சிறிது யோசித்தாள். அன்று ரயிலை விட்டு இறங்கிய பின்பு பிரிந்தவர்கள் ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அல்லவா சந்திக்கிறார்கள்? சிறிது யோசித்தவள் சட்டென்று, "ஓ! நீங்களா? அன்று ரயிலில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோமே! மறந்தே போய் விட்டேன். உட்காருங்கள்” என்று உபசரித்தாள். கமலா, காமுவைப் பார்த்து. காமுவும் பதிலுக்கு வணக்கம் செலுத்தி விட்டு உட்கார்ந்தாள்.
காமு தன் தகப்பனாரின் கடை வியாபாரத்தைப் பற்றி கமலாவிடம் கூறினாள். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுக்கே போதாமல் இருப்பதையும், மேலும் தான் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக ஆகும் செலவைப் பற்றியும் சொன்னாள்.
இதையெல்லாம் காமுவிடமிருந்து கேட்டதும், கமலா தனக்கு தெரிந்த சில யோசனைகளைக் கூறி, "தையல், சிறு குழந்தைகளுக்குப் பாடம், பாட்டு சொல்லிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்வதால் ஏதாவது கொஞ்சம் மேல்வரும்படி கிடைக்கும்; செய்து பாரேன்!" என்றாள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, மறுபடியும் வருவதாகக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றாள் காமு.
அதற்குப் பிறகு காமு கமலாவின் வீட்டிற்கு ஒழிந்த சமயங்களில் போய் வந்தாள். நாளடைவில் கமலாவின் கணவனும், சங்கரனும் நண்பர்கள் என்பது அவளுக்குத் தெரிய வந்தது. அடிக்கடி நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது உண்டு என்பதும் தெரிந்து போயிற்று.
நாளடைவில் காமுவின் மனம் நீலாவைப் பற்றி கமலா விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடி துடித்தது.நீலா அவளை விட அழகியா? நீலாவின் குணம் காமுவின் குணத்தை விடச் சிறந்ததா? நீலா கணவனிடம் அன்பு பூண்டு வாழ்கிறாளா? இருவரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கிறார்களா? இப்படிப் பலவிதமான கேள்விகள் அவள் மனத்துள் எழுந்து அவளை வேதனைப் படுத்தின.
தொடரும்...