பந்தல் போட்டது போல் படர்ந்து மணம் வீசிக் கொண் டிருக்கும். வீட்டிற்குத் தேவையான கீரை, காய்கறிகள் காய்க்கும் கொல்லைப்புறம், கரும்பைப் போல் இனிக்கும் கிணற்று நீர், அதைச் சுற்றிலும் அடர்த்தியாக வாழை மரங்கள், மத்தியான வேளைகளில் 'கீச் கீச்' சென்று சதங்கை ஒலி எழுப்பும் சிட்டுக் குருவிகளும், அணிற்பிள்ளைகளுமாக அந்தக் கிணற்றங்கரை இன்ப வனமாக இருந்து வந்தது.
"இனிமேல் பட்டண வாசத்தில் ஒரு அறைக்கு மாதம் பதினைந்து ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். வீட்டுச் சொந்தக்காரருக்குப் பயந்து நடக்க வேண்டும். வாடலும், சொத்தையும், உலர்ந்ததும் தான் சாப்பிட வேண்டும். பச்சைப் பசேல் என்று காய்கறிகள் எங்கே கிடைக்கிறது?" விசாலாட்சி யோசனையில் ஆழ்ந்தவளாகக் கன்னத்தில் கை ஊன்றி வண்டியில் உட்கார்ந்திருந்தாள். ராமபத்திர அய்யரின் மனம் பலவிதமான யோசனைகளில் ஆழ்ந்து கிடந்தது. காமு ஒருத்திதான் உற்சாகமாக இருந்தாள். பணம் இல்லாத குறைவால் தன் வாழ்வு தாழ்வடையக் கூடாது. எப்படியாகிலும் முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் தானே அவள் பட்டினம் போகிறாள்?
''வீடு விற்ற பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டாள் விசாலாட்சி, கணவனைப் பார்த்து.
"என்னத்தைச் செய்கிறது? எனக்கு என்ன தெரியும்? நடேசனைப் போய்ப் பார்க்கிறேன்" என்றார் ராமபத்திர அய்யர்.
“த்சூ” என்று சூள் கொட்டினாள் விசாலாட்சி.
''பணக்காரர் உறவே நமக்கு வேண்டாம் அப்பா!" என்றாள் காமு கண்டிப்பாக.
"முன் பின் தெரியாத ஊருக்குப் போகிறோம். யார் உதவியால் முன்னுக்கு வருவது?” என்று கேட்டார் தகப்பனார்.
'அவரைப் போல் ஆயிரம் பேர்கள் இருக்கும் பட்டினத்தில் அவர்கள் வீட்டைத் தேடிக் கொண்டுதான் போக வேண்டுமாக்கும்! சத்திரம் சாவடி ஒன்றும் கிடையாதா என்ன, அங்கே?'' என்று கோபத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து. பெண்ணின் மனம் எவ்வளவு