பார்த்தாயாடி அம்மா? தட்டை எடுத்து அலம்பி வைக்கக் கூட உன் ஓரகத்திக்கு ஒழிவில்லை. ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் முகம் அலம்பிப் பவுடர் பூச ஒழிவிருக்கிறது! இவள் தட்டை அலம்புவுதற்காக உன் மாமியாரை ஐந்து ரூபாய் சம்பளம் கூடப் போட்டுத் தரச் சொல்லி கேட்கப் போகிறேன். ஆமாம்!" என்று கோபமாகக் கூறினாள், மாமி.
"இப்படியும் குடித்தனப் பாங்கு தெரியாமல் பெண்களை வளர்க்கிற பெற்றோர்கள் இருக்கிறார்களா? படித்துப் பட்டம் பெற்று சமூக சேவை செய்கிறேன் என்று ஜம்பமாக நாலு பேர் எதிரில் வந்து விடுகிறார்கள் இந்தப் பெண்கள்! அவர்கள் வீட்டைப் போய்ப் பார்த்தால் நாய் கூட அங்கு தலை வைத்துப் படுக்கும் ஸ்திதியில் இருக்காது. மாலையில் களைத்து வீட்டுக்கு வரும் கணவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுப்பதற்கு மனைவி வீட்டில் இருக்க மாட்டாள். அவர்கள் வழியைப் பின் பற்றுபவள் தான் நீலாவும்" என்று ஏதேதோ எண்ணமிட்டாள் சம்பகம்.
இதற்குள் இடை வேளை சாப்பாட்டிற்காகப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்த பானு தன் தாயாரிடம் வந்து, அம்மா! சித்தியைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே? அதோ பார் அம்மா, மாடிக்குப் போகிறாள் சித்தி!" என்று கூறிவிட்டு ஆவல் ததும்பும் குரலில், "சித்தி, சித்தி! இங்கே வாயேன்" என்று கூப்பிட்டாள் குழந்தை.
நீலா ஒரு வித மிடுக்குடன் திரும்பிப் பார்த்தாள். "ஆகட்டும் வருகிறேன். இப்போது ஒன்றும் முழுகிப் போய் விடவில்லை பார்" என்று கூறி விட்டு, விடுவிடு என்று மாடிப் படிகளைக் கடந்து சென்று விட்டாள். அவள் பேச்சைக் கேட்ட சமையற்கார மாமி முகத்தை ஒரு குலுக்குக் குலுக்கினாள். அவள் முகபாவம். "பார்த்தாயா அவள் கர்வத்தை ?" என்று கேட்பது போல் இருந்தது.
"ஏன் அம்மா சித்தி ஒருத்தருடனும் சரியாகப் பேச மாட்டேன் என்கிறாள்?" என்று பானு சம்பகத்தைக் கேட்டாள்.
''எனக்கும் தெரிய வில்லையே, பானு. புதுசு பாரு. பழக வேண்டாமா?" என்று பதில் கூறினாள் சம்பகம். அவள் மனம் மட்டும் நீலாவின் போக்கை வியந்து கொண்டே இருந்தது.