செய்வது? கடவுளின் கருணை இது. இந்த விசனம் என்றைக்கும் நீங்காதது. உன் தாயாரை நேரில் கண்டால்தான் அத் துயர் தீரும். ஆகையினால் இதையே எண்ணி மேலேயாக வேண்டியதை நிறுத்துவது முடியாது. உன்னுடைய நலனைக் கோரியே நான் இதை சீக்கிரத்தில் முடித்து விட நினைக்கிறேன். நான் இப்போது பரிமளாவின் வீட்டிற்குச்சென்று விஷயத்தை வெளியிட்டு அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பெற்று வருகிறேன்-என்று கூறி விட்டுப் பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.
பரிமளா, அவள் சகோதரி, தாயார் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். பொன்னுசாமியைக் கண்டதும் "வாருங்கள் உட்காருங்கள்" என்று அவரை அமரச் செய்தார்கள். "என்ன விசேஷம்? ஏதேனும் தகவல் தெரிந்ததா!" என்று பரிமளாவின் தாயார் கேட்டாள்.
இதைக்கேட்ட பொன்னுசாமி "தற்போது பெருத்த சந்தோஷ சமாசாரத் தகவலை கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் எல்லோருடைய மனத்திற்கும் மிக்க பிடித்தமாயிருக்குமென்று நம்புகிறேன்; அதாவது நான் புண்ணிய க்ஷேத்திர யாத்திரை செய்யச் செல்வதென்று தீர்மானித்துள்ளேன். தற்போது நடக்கும் சச்சரவுகள் யாவும் செல்வத்தையும், செல்வர்களையும் பொருத்தியதாக இருக்கின்றன; ஆதலால் அதற்கு ஒரு வழியைச் செய்து விடுவது உசித மென்று தோன்றுகின்றது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விலங்கு பூட்டி விடலாமென்று நினைக்கின்றேன்; உங்கள் யோசனை என்ன? இஷ்டம் எப்படி? தெரிவித்தால் மெத்த சந்தோஷம்." என்றார். இந்த எதிர் பாராத வார்த்தையைக் கேட்ட பார்வதியம்மாள் மெத்த சந்தோஷமடைந்து "ஐயா! தாங்கள்தான் எங்கள் குலத்தைக் காக்கும் புண்ணியவானாகையினால் தாங்கள் சொல்வதற்கு இரண்டாவது கிடையாது என்பது நான் கூற வேண்டுவதில்லை. பரிமளாவை உங்கள் புதல்வியாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். கேசவனின் சம்மதத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டீர்களா? என் மனப் பூர்வமாய் இந்த விவாகம் என்று நடைபெறும் என்று நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்றே எனக்கு சுதினம்." என்றாள்
பொன்:-அம்மா! கடவுளின் கிருபையினால் உங்கள் விருப்பம் ஈடேறி விடும் என்பதே எனது நம்பிக்கை: என்னுடைய கடமையில் இதையும் ஒன்றாக நான் தீர்மானித்திருக்கிறேன்; கேசவனது சம்மதத்தைப் பெற்றே நான் இங்கு வந்தேன்; மணமகளின் சம்மதம்தான் தெரியவில்லை - என்று பரிகாஸமாக நகைத்துக் கொண்டே 'பரிமளா ! கேசவனை மணக்க உனக்குச் சம்மதமில்லை எனில் தெரிவித்துவிடு; பயப்படாதே! வேறு நல்ல வானாசுப் பார்த்து நான் விவாகம் செய்து வைக்கின்றேன்." என்றார்.