எவ்விதம் செய்யும்படியாகக் கூறுகிறாரோ அவ்வழியே செய்வோம். எந்த சமயத்தில் யார் வந்து உன்னையழைத்தாலும் நீ சடக்கென்று ஏமாந்து சென்று விடாதே! வந்திருப்பவர்கள் யாரென்பதை முக்கியமாகத் தெரிந்து கொள். உன்னால் கூடுமானால் அவர்களிடம் பேசி விஷயமும் அறிந்து கொள். இன்று செய்தது போல என்னிடம் வந்து மிரட்டினாலும் நான் என்னுடைய உயிரையாவது விடுவேனேயன்றி உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னைப்பற்றி என்னிடம் கேட்டதுபோல உன்னிடம் என்னைப்பற்றி கேட்டால் நீ பயப்படாதே. தைரியமாய் மறுத்துவிடு; அன்றி பயந்துகொண்டு எழுதியனுப்பினாலும் நான் அதைக்கண்டு நம்பிவிடமாட்டேன். அதற்குத் தக்க வகையில் ஏற்பாடு செய்வேன்; கண்மணீ! உனது நித்திரை பங்கமாகின்றது.
பரிமள:-அன்பரே! எனது நித்திரை பங்கமானால் அதனால் பாதகமில்லை. உங்களுக்கு ஒருவிதமான ஆபத்தும் நேராமலிருந்தால் அதுவே போதும்! நான் கோருவது அதுதான். இரவு பகலாகக் கடவுளை வேண்டியவண்ண மிருக்கிறேன். எனது எண்ணத்தில் சதா இக் கவலையே அதிகரித்து விட்டது. இதனால் ஊணுறக்கமும் கொள்வதில்லை. சதா சிந்தித்த வண்ணமே இருக்கிறேன்; என்ன செய்வேன்? கடவுள் நமக்கு ஒருவிதமான ஆபத்துமில்லாமல் காப்பானா!
கேசவ:- பரிமளா! இவ்விதம் கவலைப் படுவதெல்லாம் நமது அஞ்ஞானத்தினால்தான். உண்மையான ஞானமும் பக்தியும் இருக்குமாயின் பாரத்தை அவன் சரணத்தில் அர்ப்பணம் செய்துவிட்டு நாம் அவனை நம்பி இருந்தால் நமக்குக் கவலை இல்லை, இந்த வேதாந்தம் பிறருக்குப் போதிப்பது எல்லோருக்கும் எளிதுதான்; என் மனம் மட்டும் கவலையற்று, சலனமற்று இருக்கின்றதென்று நினைக்கின்றாயோ! என்னுடைய மனத்திலிருக்கும் வேதனையை வெளியிடவே. முடியாது. என்னருமைத் தாயைக் கண்டு களிக்கும் நாளை என்னுள்ளம் எதிர் பார்ப்பதை - அந்த ஆவலை- சர்வேசன்தான் அறிய வேண்டும். கண்மணீ! உன்னுடைய உண்மையான மனோபாவத்தை இன்று நன்றாகத் தெரிந்துகொண்ட ஒரு சந்தோஷந்தான் என் இதயத்தில் பொங்குகின்றது. அச் சந்தோஷம் நிலைப்பதற்குக் கடவுளின் கருணை எவ்வித மிருக்கிறதோ! நானோ அனாதைச் சிறுவன்; நீயும் சிறுமி. உன்னுடைய நிலைமை கேவலமாக விருந்ததெனினும் நீ இப்போது நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய்; என்னுடைய நிலைமையோ, அன்றையதற்குச் சிறிது மாறுபட்டிருப்பதாகத் தோன்றினாலும், மன வருத்தத்திற்கு மாறுதல் எற்படவில்லை என்பதை என்னுள்ளமன்றே அறியும்! பரிமளா! என்னுடைய விசனத்தைச் சிறிது போக்கி எனக்கு உற்சாகத்தை யளித்தது எந்தப் பொருள் எனின், அபார உணர்ச்சிக்கு ஆஸ்பதமாகிய சங்கீதமும் ஆநந்த மிக்க நடிப்பும் ஆகும், அதோடு உன்னுடைய அருமையான