Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 09 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
விவாக மகிழ்ச்சி- விபரீத நிகழ்ச்சி
பரிமளா தனக்கு விவாகம் சமீபித்து விட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து அந்த நாளை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.விவாகமானதும் தான் முன்னர் நாடகத்தில் நடித்த பாத்திரங்களைப்போல தினசரி வாழ்க்கை நடத்தப் பெரும் ஆர்வங் கொண்டிருந்தாள். அது விஷயமாகவே யோசித்துக் கொண்டிருக்கையில், பொன்னுசாமியும் பார்வதியம்மாளும் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அச் சமயம் கேசவன் வெகு வேகமாகவும் தன்னை மீறிய ஆநந்தத்துடனும் ஓடி வந்து, வெகு வணக்கத்துடன் அக் கடிதத் தைத் தன் எஜமானர் கையில் கொடுத்து "தந்தையே! நமக்குச் சந்தோஷ காலம் பிறந்து விட்டது. இக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்'' என்று கூறினான். உடனே பொன்னுசாமி கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பேராநந்தமடைந்து "கேசவா! உன் பக்கத்தில் கடவுள் எப்படி மறைந்து வேலை செய்கிறார் பார்த்தாயா! பரிமளாவின் அதிருஷ்டம்தான் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்ட தாயார் இவ்விதம் விவாக சமயத்திற்குச் சரியாக வந்து சேருகிறாள். ஆகா! என்ன ஆநந்தம்! கேசவா! உன் மனம் குளிர்ந்ததா ! நீ இப்போதே புறப்பட்டு, வண்டி எப்போது புறப்படுகின்றது என்பதை விசாரித்துப் பிரயாணத்திற்குச் சித்தமாயிரு. நான் இதோ சென்று பணங் கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுத் தன் வீட்டை நோக்கிச் சென்றார்.
கேசவன் பரிமளாவிடம் சென்று, "பரிமளா! நான் ஊருக்குச் சென்று வருகிறேன்; என் தாயார் எனக்குக் கடிதமெழுதி இருக்கி றாள். நமது எஜமானர்;சொல்லியது போல உன்னுடைய மகிமை தான் - பாக்யந்தான்-உன் மாமியார் விவாகத்திற்கு வந்து விடுகி றார்கள்; கண்ணே! பரிமளா! நான் சென்று என் தாயார், சகோதரிகள் ஆகியவர்களுடன் உடனே திரும்பி விடுகிறேன். எந்தக் காலத்திலும் நம்மிருவரையும் நிழல் போல ஆபத்துச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. நீ ஜாக்ரதையாக இரு; கவலைப்படாதே. தைரியமாக இரு, 'நமது திருமணத்தைக் கண்டு களிப்பதற்கு என் தாயார் இல்லையே! அனாதையைப் போல நான் மணம் செய்து கொள்ள நேர்ந்ததே!' என்று மிக்க விசனக் கடலில் ஆழ்ந்திருந் தேன். இச்சமயம் கடவுள் என் கவலையைத் தீர்க்கவே இக் கடிதத்தை எனக்கு அனுப்பினார். என்னுள்ளம் மகிழ்கின்றது. எல் லாம் இறைவனருள்" என்றான்.