சினேகம் விளையாட்டுப் பருவமாகிய களங்கமற்ற நிலைமையில் சேர்ந்ததும் என் மனமடைந்த ஆநந்தம் இன்றும் கூறத் திறமன்று.
ஆனால், கண்ணே! இனிமேல் நான் தாராளமாக மனத்தை விட்டுக் கூறலாம். என்னுடைய மனத்தில் உண்டாகிய ஆழ்ந்த அன்பு பூர்ணமாய் என் இன்ப வடிவமாகிய உன் மேல் காதல் உருவங் கொண்டு கனிந்து விட்டது. இதுநாள் வரையில் நான் அதுபற்றி வெளியிடவும் வெட்கினேன்; அஞ்சினேன்; நீ என்ன நினைப்பாயோ! உன்னுடைய உண்மையான போக்கு எதுவோ! அதை யறியாது நான் எனது காதலைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அதே போல இன்று வரையில் நடந்து வந்தேன்; நான் இன்று இங்கு வந்ததும் நீ யறியாவாறு உன்னை 5 நிமிடம் கவனித்தேன். உன் வாயினின்றும் உன்னை யறியாது வெளியான சிற்சில வார்த்தைகளைச் செவியுற்ற பிறகு உன் மனோபாவத்தை அறிந் தேன். கண்மணி! நான் சென்று வருகிறேன். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தால் உன்னுடைய தேகம் கெட்டு விடும்.
பரிமளா:- அன்பரே! நீங்கள் உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவித்தது போல நானும் வியக்தமாகத் தெரிவிக்க வேண்டியது கடமையல்லவா! நான் சிறு பிராயத்தில் நடித்த அளவிலேயே ஏதோ ஒருவிதமான சினேகம், அன்பு முதலியன உதித்தன. எனக்குக் குருவாகவும் இருந்து தாங்கள் சங்கீதம் முதலியவை கற்றுக் கொடுத்ததும், அன்யோன்ய பாவம் அதிகரித்திருந்ததும் என் தாயாரறிந்த விஷயமே! எனக்கு வயது வந்த பிறகு தங்களையே மணக்க வேண்டுமென்ற வேட்கை யுதித்தது. அதை வெளியிட உங்களைப் போலவே அஞ்சி லஜ்ஜையுற்றேன், என் தாயார் ஒரு தினம் தன் மனப் பூர்வமாக என்னைத் தங்களுக்கே மணம் செய்விக்க விருப்ப மிருப்பதாயும் தாங்கள் சம்மதிப்பீர்களோ, மாட்டீர்களோ என்று சந்தேகம் கொண்டிருப்பதாயும் இவ் விஷயத்தை எஜமானரிடத்திலேயே நேரில் தெரிவித்து காரியத்தை முடிக்க வேண்டுமென்றும் சொல்லி "உனக்கு இது விஷயத்தில் சம்மதந் தானா?" என்று என்னைக் கேட்டாள். என்னை மணப்பதற்குச் சம்மதமில்லையாயின் எனது சகோதரி சகுந்தலாவை மணப்பதற் குப் பிரியப்பட்டால் அவளைக் கொடுத்து விடுவதாகவும், எவ்விதமாவது உங்களுடைய சம்பந்தம் செய்து கொள்ளவேண்டு மென்றும் கூறினாள். இதைக் கேட்ட என் மனம் மெத்த மகிழ்வுற்றது. என்னுடைய சுக துக்கத்திற்குப் பாத்யதையுடைய என் அன்னையின் மனத்தைக் களிப்பிக்கவேண்டியது என் கடமை யாதலால் நான் என் மனத்திலுள்ளதை விவரித்துக் கூறியதோடு "அம்மா! என்னை மணக்கச் சம்மதப்படவில்லையாயின் நானே என் சகோதரியை மணம் செய்விக்கின்றேன்; எனக்கு அதுபற்றி சற்றும் பொறாமை இல்லை." என்று உறுதியாகக் கூறி விட்டேன். என் தாயார் மெத்த சந்தோஷங் கொண்டாள். எஜமானரின் வருகைக்கே காத்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம்