அப்போது இராக்கால மாகையினால் எங்கும் நிச்சப்தம் குடிகொண்டுவிட்டது. பரிமளவல்லியின் வீடு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை இடித்தான். உடனே கதவு திறக்கப்பட்டது. கேசவன் கதவைத் திறந்த வேலைக்காரியை நோக்கி "அம்மா! உன் சின்ன எஜமானியம்மாள் இருக்கிறார்களா!" என்று கேட்டான். "இருக்கிறார்கள்" என்ற பதில் வந்த உடனே, அவ்வறைக்குச் சென்று ஓசை செய்யாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே கவனித்தான்.
பரிமளா அப்போது நித்திரை கொள்ளாது புரண்டபடியே "ஓ கடவுளே! எந்த ஊரிலேயோ கிடந்த என்னை இங்கு கொணர்ந்து, உவமையிலா உத்தமனாம் கேசவனோடு நடிக்கச் செய்து, ஆழ்ந்த அன்பையும் உண்டாக்கி, அதை வேரூன்றச் செய்துவிட்டு என்னுடைய விதியின் கொடுமையினால் என் அன்பனைப் பிரித்தும் வைத்துவிட்டாயே! இது தகுமா! அந்தோ! இன்ப வடிவமான கேசவனின் திருமுகத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன! என்னுயிரையே பிரித்திருப்பதாகவன்றோ தோன்றுகின்றது. ஹா! கேசவா! கேசவா! என்ன அழகிய பெயர்! ஒருதரம் நாமத்தை உச்சரித்தாலும் கர்ம வினை நீங்குமே! என் பாபம்தான் அத்தகைய உத்தமனைப் பிரித்துவிட்டது." என்று மனத்திற்குள்ளேயே எண்ணமிட்ட வண்ணம் "ஹா! கேசவா! கேசவா!" என்ற பாகத்தை மட்டும் உரத்துக் கூறிக்கொண்டிருப்பதைக் கண்ட கேசவனுக்கு இன்ன தென்று விவரிக்க இயலாதவிதமான ஆநந்த உணர்ச்சி யொருபுறம் பொங்குகின்றது. மற்றொரு புறமோ, "என்ன ஆகுமோ!" என்கிற ஏக்கம் வதைக்கின்றது. பரிமளவல்லியின் உண்மையான மனோபாவத்தை பகிரங்கமாக இதுபிரியந்தம் அவன் அறியாதிருந்தான். இப்போது அது நன்றாகத் தெரிந்துவிட்டதால் அவனுக்கு அது விஷயத்தில் நிரம்ப சந்தோஷம் உண்டாகிவிட்டது.
தேகத்தில் கத்தியினால் பட்ட குத்துக்களும் வலி தெரியா தொழிந்தன. அவன் மெல்ல கட்டிலினருகில் சென்றான். "பரிமளா! நான் அகாலத்தில் உன்னுடைய அனுமதியின்றி அநாகரிகமாய் உள்ளே வந்ததற்காக என்னை மன்னிக்கவேண்டும்." என்று மரியாதையாகக் கூறி நின்றான். அதுவரையில் தன் போக்காகப் படுத் திருந்த பரிமளா இந்த குரலைக் கேட்டவுடன் அம்ருத தாரையைப் பருகியது போல மிக்க குதூகலத்துடன் எழுந்து கேசவனைக் கண்ட தும் உண்டாகிய மலர்ந்த முகத்துடனும், அடங்கா நகைப்புடனும் 'வாருங்கள்! வாருங்கள்! நான் மன்னிப்பதா! பேஷ்! பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசுவது அழகா!...... என்ன இது தேகத்தில் கட்டுக்கள்! ரத்தக்காயங்கள்........ கரைகள்!.... ஐயோ! யாது ஆபத்து விளைந்துவிட்டது?" என்று அலறியவாறு கேட்டாள்.