நீங்களறியீர்கள் போலும், என்னுயிரினுமினிய பரிமளவல்லியை கொடிய பாதகர்களாகிய உங்கள் கையில் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன். என்னைத் தயாராகச் சுட்டுக் கொல்லலாம்." என்று வெகு முடுக்காக மாரைக் காட்டி நின்றான்.
எழுத வாரம்பித்ததும் சந்தோஷங்கொண்ட நால்வரும் எதிர்பாராத இச் செய்கையினால் மிக்க வியப்புற்றார்கள். ஒருவன் பேனாக் கத்தியை எடுத்தான். அதற்குள் கேசவன் "அடேய் திருட்டு நாய்களே! நீங்கள் முதலில் சுடாமலிருக்கையிலேயே தோடா இல்லாத் துப்பாக்கி என்பதை நானறிந்து கொண்டேன். பேடிகளே! இப்போது கத்தியை எடுத்துக் குத்தப் போகிறீர்களா! இதற்கு நான் சளைத்தவனன்று. தாராளமாகக் குத்துங்கள்." என்று கூறிக் கொண்டே தன் மேஜைமீதிருந்த பிகிலை எடுத்தான். அதற்குள் கேசவன் கையில் பேனாக் கத்தியால் குத்தப்பட்டது. அதையும் அவன் பொருட்படுத்தாமல் பிகிலை வெகு விசையாக ஊதினான். மீண்டும் பேனாக்கத்தியினால் அவனது தேகத்தில் அனேக இடங்களில் குத்திவிட்டு "பயலே! நீ இம்முறை தப்பினாய்; இனிமேல் தப்ப மாட்டாய் இரு" என்று கூறிக்கொண்டே அவர்கள் ஓட்டமெடுத்தார்கள்.
கேசவனின் மனத்திலுள்ள ஆவேசத்திலும் பரிமளவல்லிக்கு நேரவிருந்த ஆபத்தும் அவன் மனத்தில் பூரணமாகப் பதிந்து வேலை செய்வதால், இந்த கத்திக் குத்தையும் அவன் லக்ஷியம் செய்ய வில்லை. ரத்தம் பலவிடங்களிலும் ஒழுகுகின்றது. அதை அலம்பித் துடைத்துக்கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தான் எஜமானர் திருப்பதிக்குச் சுவாமிதரிசனார்த்தம் சென்றிருப்பதால் அவர் இல்லை. தான் இனி அரை நாழிகையும் தாமதிக்கலாகாதென்று எண்ணியவனாய் அவன் ஒரு வண்டியமர்த்திக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச் சென்று நடந்த சகலமான விஷயங்களை யும் விடாது கூறினான்.
அதைக் கேட்ட நாயுடு "கேசவா! நீ விசனப்படவேண்டாம். நீ பரிமளாவினிடத்தில் எத்தகைய காதல் கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு நன்கு புலப்படுகின்றது. உன்னுயிரையும் திருணமாய் மதித்த உத்தமன் உனக்கு ஒரு குறைவும் வராது. இனிமேல் நான் ஒரு ஆளை உன் வீட்டில் காவல் வைக்கின்றேன்: அவன் உன் வீட்டிலிருப்பதாகப் பிறரறியாவாறு அவன் இருப்பான். ஏதேனும் விசேஷமிருப்பின் எழுதியனுப்பு: முக்கியமாயின் நேரில் வந்து கண்டு பேசு. நீ என்னிடம் சம்மந்தம் வைத்துக்கொண்டிருப்பதே ஒருவருக்கும் தெரியவேண்டாம்: ஜாக்கிரதையாய் நடந்துகொள்.' என்று எச்சரித்து அனுப்பிவிட்டார்.
அவரிடம் விடை பெற்றுக்கொண்ட கேசவன் அங்கிருந்து நேரே பரிமளாவின் வீட்டிற்கு வந்தான்.