தன் அண்ணியையும் அண்ணன் குழந்தைகளையும் பார்க்க நாளை புறப்படப் போகிறாள். நீங்கள் அவர்களை ஏதாவது செய்து பெரும் பாபத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம். அவள் சாதாரணமான நாடகக்காரியல்ல வென்பதை இனிமே தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கடிதத்தை நிராகரித்தால் உங்கள் கதி வெகு பயங்கரமாக முடியும். என் தாயார் அங்கு வரும் முன்னர் உங்களுக்கு இச் செய்தி எட்ட வேண்டு மென்கிற எண்ணங்கொண்டு இதை எழுதினேன். உஷார்! உஷார்!!
இங்ஙனம்
உங்கள் மனைவி
என்ற கடிதத்தைப் படித்ததுதான் தாமதம் பரிமளாவின் மனம் அப்போதடைந்த மாறுதலுக்கும் உணர்ச்சிக்கும் உவமை கூறவே சாத்தியமன்று! தன் பிதாவின் சரிதை தெரிந்ததனால் இன்ன தென்று கூறவியலாத நிலைமையை அடைந்து, அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். அவள் மனத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளடக்கிக்கொண்டு வெகு உக்ரத்தோடு "அடேப் அக்ரமப்பதரே! இக்கடிதங்களையெல்லாம் படித்து விஷயத்தையறிந்தபின்னரா இங்கு துர் எண்ணங் கொண்டு வந்தாய்! சீச்சி! மடையா! இப்போது இந்த முதல் கடிதத்தின் தகவல் என்ன? எனக்குத் தெரியவேண்டும். அதை விவரமாகத் தெரி வக்காவிடின் உன்னுயிர் போய்விடும். என்னைச் சாமான்ய நாடகக் காரி என்ற துர் எண்ணங்கொண்டல்லவா நீ இந்தவிடத்திற்கு வந்தாய்! நான் நாடகவேடந்தாங்கி நடிப்பதுபோலவே உன்னைக் கொன்றுப் போடுகின்றேன். கேசவனை இத்தகைய குற்றத்தில் சிக்க வைத்ததற்கு நீதான் காரணம் என்பது இக்கடிதம் விளக்கிவிட்டது. உண்மையைக் கூறு" என்று ஒரு விழி விழித்தாள்.
முதலில் மிக்க தடதடலான உற்சாகத்துடன் வந்தவன் அங்கு நடக்கும் எதிர்பாராத சம்பவத்தினால் நடுநடுங்கி விலவிலத்துப் போய்விட்டான். அவன் உயிர் முக்கால் பாகமும் போய்விட்டதென்று கூறலாம்; துப்பாக்கியைப் பார்த்தவுடனே தலை தொங்கி விட்டது. இந்நிலைமையில் பரிமளாவின் மனோ உறுதியையும் வீரதீர பராக்கிரமத்தையும் கண்டு பிரமித்தான். அவளுடைய கேள்விகளும், அதிகார தொனியும் அவனைக் கலக்கிப் பயமாகிய சாகரத்திலாழ்த்தின. ஆகையினால் அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது