தானம்மா எதுவும் அமையும்: இந்த விஷயம் உண்மையா, அல்லவா?" என்று குழந்தையைப் போலக் கேட்டாள்.
பார்வதி- கண்ணே! இந்த விஷயம் நீ கனவிலறிந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இவ்விவரங்கள் உனக்கு யார் மூலமாகவோ தெரிந்திருக்கவேண்டும். கண்மணி! பரிமளா! இனிமேல் நானாகவே விஷயத்தை யறிவிக்கலாமென எண்ணினேன். உன் தந்தையின் கடமை யொன்று உளது. அதை நிறைவேற்றுதற்கு உனக்குத் தக்க தருணம் வரும்போது நான் விஷயத்தை உரைக்க நினைத்தேன். அதற்குள்ளாகவே நீ யறிந்துவிட்டாய்.
பரிமளா:- அம்மா! என் தந்தையின் கட்டளையா! அது யாது! அதை என் எனக்கு இதுகால பரியந்தம். எடுத்துரைக்க வில்லை.உடனே அதைத் தெரிவி.
பார்வதி - பரிமளா! என்னுடைய கதையை நான் சொன்னால் பட்ட மரமும் பால் வடிக்கும்; செத்த பிணமும் உயிர் பெற்று எழுந்து விசனிக்கும். ஆதிமுதல் நான் சிறுமைப்பட்டது கணக்கு வழக்கில்லை. உன் தந்தையினால் பதமடைய நினைத்தேன்; அதுவும் என் துரதிருஷ்டத்தினால் மண்ணாகிவிட்டது. உன் தந்தை எந்த வேலையும் கிடைக்காமல் மிக்க வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அத் தருணம் மிலிடரியில் வேலை கிடைத்தது. அதில் சேர மனமில்லாமலேயே சேர்ந்தார். சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு மிலிடரி கூட்டத்தார் மிருகங்களைக் கொல்வதற்காகவும் மற்றவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் காட்டிற்குச் சென்றார்கள். அதில் உன் தந்தையும் ஒருவராவர். அவர் ஒரு பன்றியைச் சுடுவதற்குத் துப்பாக்கியைப் பிரயோகித்தார்; அந்த துப்பாக்கிக் குண்டு பன்றிமேல் விழாமல் காட்டில் விறகுதலையன் ஒருவன் சென்றான்; அவன்மீது பட்டுவிட்டதாம். உடனே அவன் உயிர் துறந்தானாம். அந்த எதிர்பாராத கோரமான கொலையைத் தன் கையினாலேயே செய்துவிட்ட கலக்கம் அவரைப் பெரும்பாலும் வாட்டிவிட்டது; வேலையை விட்டுவிடவே நினைத்துவிட்டார்.
அத் தருணமே சண்டையும் வந்துவிட்டது. அதற்கு அவர் கட்டாயமாகச் செல்லவேண்டியிருந்தது. இல்லையேல் அவரை அவர்களே சுட்டுக் கொன்றுவிடுவார்களாம். அவர்கள் கையினால் இறப்பதைவிட அங்கு சென்றுதான் சாவது மேல் என நினைத்து "இனி நான் திரும்ப மாட்டேனென்றும், ஒருக்கால் திரும்பினால் பெருத்த புகழும் பதவியும் கிடைக்கும் என்றும் அப்படித் திரும்பாது இறந்துவிட்டால் எனது குடும்பத்திற்கு சர்க்கார் ஏதேனும் பொருள் உதவி