வீர : (தேடுகிறான்) எந்த இடத்திலும் காணோமே ஆஹா இதோ அகப்பட்டாள் (இருளில் தோழனைக் கட்டிக் கொள்கிறான்.)
தோழ : அடடா! எவ்வளவு சாமர்த்தியமாய் என்னைப் பிடித்துக் கொண்டீர்கள். விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள். என்னைப் பிடித்த மாதிரி வஸந்தஸேனையைக் கட்டிப் பிடித்திருந்தால், அவளுடைய உயிர் போயிருக்கும் போதும் முதலில் என்னை விடுங்கள்.
வீர : அப்படியானால் போ அப்பால். இது யார்? அகப்பட்டாள்! அகப்பட்டாள்! இதோ அகப்பட்டாள்! (சேவகனைப் பிடித்துக் கொள்கிறான்.)
சேவ : ஐயோ! எசமாங்களே! என்னைல்ல கட்டிக்கிட்டீங்க இது என்னாங்கிறேன் வெக்கக் கேடு! உடுங்க, உடுங்க, நசுக்காதிங்க, ஐயோ செத்தேன்!
வீர : அடடா! நீயா போ; (விட்டு விடுகிறான்) இப்படித் தானே போனாள் எங்கே போயிருப்பாள்? ஆஹா! இப்பொழுது தான் அந்தச் சிறுக்கியைப் பிடித்தேன். (முன்னாக வந்த கோமளாவின் தலை மயிரைப் பிடித்துக் கொள்கிறான்.) ஓடவா பார்க்கிறாய்! நான் சூரப்புலி என்பது உனக்குத் தெரியாதோ! உன் சாமர்த்தியம் என்னிடத்திலா செல்லும்! அடே நண்பா! இதோ அகப்பட்டாள் வேசி! கிருஷ்ணன் சீதையின் தலைமயிரைப் பிடித்துச் சபைக்கு இழுத்து வந்ததைப் போல, நான் இவளைப் பிடித்துக் கொண்டேன்.
தோழ : ஸ்திரீயே! பால்யர்களான நாங்கள் ஓடி வரும்போது எங்களை ஏமாற்ற உன்னால் முடியுமா?
கோம : ஆகா இதென்ன அநியாயம் என்னை ஏன் பிடித்துக் கொண்டீர்கள்? விடுங்கள் விடுங்கள் ஒய்! ஸோமேசரே? வாரும்! வாரும்!
தோழ : இதென்ன ஆச்சரியம்! வேறு குரலாய் இருக்கிறதே!
வீர : பூனை வெண்ணெயைத் திருடப் போகும் சமயத்தில் பல விதமாகத் தன் குரலை மாற்றிக் கொள்வதைப் போல ஸ்திரீகளுக்கும் தம் குரலை மாற்றிக் கொள்ளும் வல்லமை உண்டு