ஸோமே சரி. அப்படியே ஆகட்டும். நான் அவரிடம் ஒன்றும் சொல்வதில்லை.
தோழ : பிராம்மணரே இந்த உபகாரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சகல விதமான உத்தம குணங்களையும் நீர் ஆயுதமாகத் தரித்திருக்க, உம்மை வெல்லக் கூடிய ஆயுதம் வேறு என்ன இருக்கிறது!
வீர : (கோமளாவை விட்டு விடுகிறான்) அடே நண்பா! என்ன இது! கைகளைக் கூப்பிக் கொண்டு கேவலம் தரித்திரனான இவன் காலில் விழுகிறாயே!
தோழ : எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது.
வீர : எதற்காக?
தோழ : மாதவராயருடைய நற்குணங்களுக்காக.
வீர : உண்மைதான்! வருபவருக்கு ஒரு வயிறு சோறு போடும் வல்லமை இல்லாதிருப்பது உத்தம குணந்தான்!
தோழ : அப்படிச் சொல்வது தவறு. அவர் தன்னுடைய உதார குணத்தினாலேயே ஏழையானார். வழிப் போக்கர்களின் தாகத்தைத் தீர்ப்பதினாலேயே கோடை காலத்தில் ஏரி வற்றிப் போவதைப் போலானார். அவர் தனவந்தராய் இருந்த காலத்தில் அப்படி இருந்தமையாற்றான், அவரை இப்பொழுதும் மரியாதைப் படுத்தாதவரே இல்லை. இந்த நகரத்தில் அவரைப் போற்றாதவரும் உண்டோ!
வீர : அவனைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்தத் துரும்பு யார்! இவனென்ன பெருத்த போர் வீரனா? இவன் சீதையின் புத்திரன் துரியோதனனா! அல்லது இராவணனுடைய மகன் தரும புத்திரனோ?
தோழ : ஆகா! நல்ல புத்திமான்! போதும் நாம் போவோம் வாரும். மாதவராயருடைய யோக்கியதையை இந்த ஊரில் அறியாதவர் இல்லை. அவர் வயதில் மிகவும் பாலியராய்