மண்டையை உடைக்கட்டுமா? அடாடா? இவன் இராஜனுடைய மைத்துனன் அல்லவோ! ஐயா! பெரிய மனுஷ்யாளுடைய யோக்யதை இது தானோ? மாதவராயர் எவ்வளவு தான் ஏழையாய்ப் போன போதிலும், அவரைச் சேர்ந்தவர்களை இப்படி அவருடைய மாளிகை வாசலிலேயே வருத்தி அவமதிக்க எப்படித் துணிந்தீர்? துரதிர்ஷ்டமும், ஏழ்மைத் தனமும் உண்டாவது அவமானமல்ல! இவ்விதமான கெட்ட காரியம் செய்வதே கேவலம் அவமானத்தை உண்டாக்கக்கூடிய விஷயம். ஒருவன் தனவந்தனாய் இருந்தாலென்ன? அவனிடத்தில் கண்ணியம் இல்லாவிட்டால், அவன் ஒரு நாளும் பெரிய மனுஷ்யனாக மாட்டான். அவனை எவ்விதம் இகழ்ந்தாலும் குற்றமாகாது.
தோழ: ஓய் பிராமணரே! மன்னித்துக் கொள்ளும். அடையாளம் தெரியாமையால் செய்து விட்டோம். உங்களை அவமானப் படுத்த வேண்டுமென்று நாங்கள் மனதில் நினைக்கவில்லை. நாங்கள் ஒரு ஸ்திரீயைத் தேடி வந்தோம்.
ஸோமே : இவளையா?
தோழ : இல்லை இல்லை. எங்களை ஏமாற்ற நினைத்து, இங்கு ஓடி வந்த வேறொரு மங்கையை நாடி வந்தோம். இருட்டில் ஆள் மாறாட்டமாய் இவளைப் பிடித்தோம். க்ஷமிக்க
வேண்டும். இது மனதாரச் செய்த குற்றமல்ல. நீர் எங்களை எவ்விதம் வேண்டுமானாலும் தண்டிக்கலாம். (தன் கத்தியை நீட்டி அவரை மண்டியிட்டு வணங்குகிறான்.)
ஸோமே : நீ மிகுந்த புத்திமான். எழுந்திரு. நான் முதலில் உன்னுடைய நற்குணத்தை அறிந்து கொள்ளாமல் துடுக்காய்ப் பேசி விட்டேன். போதும் எழுந்திரு.
தோழ : ஸ்வாமி! நான் கேட்பதற்கு சம்மதிப்பதானால் எழுந்திருக்கிறேன்.
ஸோமே : என்ன வேண்டும்? தெரிவி.
தோழ : வேறொன்றுமில்லை! நடந்தவைகளை மாதவராயரிடம் தெரிவிக்காமல் இருத்தல் வேண்டும்.