உண்டாவதற்குள் இவனை எடுத்துக் கொண்டுபோய் உள்ளே படுக்கையில் விடு.
வஸ : (தனக்குள்) ஒகோ என்னை இவர் தன்னுடைய பணிப்பெண் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்வேன்! நான் இன்னாள் என்று எப்படித் தெரிவிப்பேன்! ஒருவருக்கும் தெரியாமல் நான் உள்ளே வந்ததைப் பற்றி இவர் என் மீதில் என்ன அபிப்பிராயம் கொள்வாரோ! என்ன இவருடைய பேரழகு கோமளாங்கன் என்றாலும் இவருக்கே தகும். இவருடைய தேகத்தின் அழகிற்கு ஒத்தவாறு இவருடைய குணமும் புகழத் தக்கதாய் இருக்கிறது! இவரைக் கணவனாய் அடைபவளே உண்மையில் பாக்கியசாலி.
மாத : என்ன? கோமளா நான் சொன்னது காதில் படவில்லையா? ஏன் பேசாமல் நிற்கிறாய்? சீக்கிரம் குழந்தையை எடுத்துக் கொண்டு போ.
வஸ : (தனக்குள்) ஐயோ! என்னை இன்னாளென்று அறிந்து கொள்ளாமல் இவர் சொல்லுகிறாரே. நான் பிராமணர் வீட்டின் உட்புறத்தில் போகக் கூடாதவளாய் இருக்கிறேன். இதென்ன தரும சங்கடமாய் இருக்கிறது! ஈசுவரா! நீதான் இந்த சமயத்தில் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.
மாத : கோமளா என்ன மெளனமாக நிற்கிறாய்? ஆகா! இதுவும் கால வித்தியாசமோ? நீயும் என்னை ஏழை என்று அவமதிக்க ஆரம்பித்து விட்டாயோ? உன்னுடைய பிரியமும் வெறுப்பாய் மாறிவிட்டதோ? கொடிது கொடிது இல்லாமையே கொடிது. தரித்திரத்தைக் காட்டிலும் பெரிய துன்பம் உலகத்தில் வேறு ஒன்றுமில்லை.
(ஸோமேசனும் கோமளாவும் வருகிறார்கள்)
ஸோமே : ஸ்வாமி உத்தரவை நிறைவேற்றி விட்டு வந்தோம். கோமளாவை ஜாக்கிரதையாய் இதோ கொண்டு வந்து சேர்த்தேன்.
மாத : இதென்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்துக்கு முன் இங்கிருந்தவள் யாவள்? அவளை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், குழந்தையை எடுத்துக் கொண்டு போகும்படிக் கட்டளை இட்டேனே! என்ன என்னுடைய புத்திக் குறைவு! ஒருவரும் நாடாத என்