வாட்ட முனக்கேன் மகிழ்.
என்று யாவராலும் ஸ்தோத்திரம் செய்யப் பெற்ற ஸர்வேசுவரனுடைய மகிமையை நீ அறிய மாட்டாயா? நாம் பத்து மாத காலம் அன்னையின் வயிற்றில் இருந்தோமே; அப்பொழுது நமக்குத் தேவையான ஆகாரத்தையும், பிறவற்றையும் சமயம் பார்த்துக் கொடுத்துக் காப்பாற்றியது யார்? பிறகு நாம் குழவியாய் இருந்தோம்; குழந்தைக்குப் பல் இல்லையே. அதன் வாய் புஷ்பத்திலும் மிருதுவானது அல்லவா. அதற்குத் தகுந்த உணவைச் சேகரம் செய்து, சுலபமாக ஊட்டுவிக்க வேண்டும் என்று கவலை கொண்டு, அன்னையின் தேகத்தில் மிருதுவான ஓரிடத்தில் தேக ஆரோக்கியமான பாலை உண்டாக்கி வைப்பவன் யார்? நம்முடைய வேண்டுகோள் இல்லாமலே நம்மைப் பற்றி இவ்வளவு கவலைப்பட்டு, நம்மைக் காப்பாற்றிய ஸர்வேசுவரன் நாம் பெரியவர்களாய் விட்டவுடன் நம்மை மறந்து விடுவான் என்று நினைக்கிறாயா? ஆகையால் நான் என் சொந்த விஷயத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. முன் போலவே அநேகருக்கு உதவி செய்து பல ஆன்மாக்களுக்கும் ஆனந்தத்தை உண்டாக்கக் கூடிய நிலைமையில் நான் இல்லாததே என்னுடைய விஸன காரணம். இதற்கு முன் கும்பல் கும்பலாக வந்து கொண்டிருந்த விருந்தினர், இப்போது இந்த மாளிகையைத் தேடி வராமல் இருப்பதே எனக்குப் பெரிதும் வேதனையை உண்டாக்குகிறது. தேன் வற்றி உலர்ந்து போன மலரை நன்றி கெட்ட வண்டுகள் எப்படித் தேடிப் போவதில்லையோ அப்படியே முடிந்தது என்னுடைய நண்பரின் அன்பும்.
ஸோமே : இப்பொழுது தானென்ன? அவர்கள் இங்கு வர மாட்டோம் என்கிறார்களா? நீங்கள் போஜனம் அளிப்பதாய் இருந்தால் முதல் பந்திக்குத் தயாராக வந்து விடுவார்கள். அதைப் பற்றி நீங்கள் சந்தேகித்தலே தேவையில்லை. மாடு மேய்ப்பவன் புதிது புதிதான புல், பூண்டுகளின் பேரில் மாடுகளை மேய விட்டுக் கொண்டே போவதைப் போல, இவர்களும் பசுமையாய் இருக்கும் இடத்திலேயே தங்கள் மனத்தைச் செலுத்திச் செல்கிறார்கள். இலாபம் இல்லாத காரியத்தை யார் தாம் செய்வார்கள்? இதில் என்ன குற்றம்?
மாத: ஆம்! உண்மை தான்; இலாபத்திலும், சுய நலத்திலுமே கண்ணும் கருத்துமாய் இருப்பவருக்கு உற்றார், பெற்றார், அன்பினர், பகைவர் என்னும் பேதமெப்படி உண்டாகும்! கல்லினும் அல்ல எஃகினுங் கடிய அவர் மனது எவ்விதமான பற்றினாலும் இளகுமோ? ஒரு