சிரேஷ்டரே! உலகில் உதித்தால் இப்படிப் புகழுடன் உதித்தல் வேண்டும். இல்லை யாயின் பிறக்காமல் இருப்பதே உத்தமம். நீர் ஒருவரே உயிருடன் இருப்பவர்; மற்றவர்கள் நடை பிணங்களே. தனிகர்களை அடுத்த நாய்க்கும் வண்டியேற்றம் கிடைப்பதைப் போல், அவரால் எனக்கும் இந்தப் பெருமையோ அம்மா! தாங்கள் நிற்க வேண்டாம் உட்காருங்கள்.
வஸ : (உட்கார்ந்து) உமக்குக் கடன் கொடுத்த பிரபுவின் பெயரென்ன?
மகி : பணம் இருந்ததினாலேயே எல்லாரும் பிரபுவாய் விடுவார்களா? எவனிடத்தில் குணத்தழகும், பிறரை எவ்விதம் கெளரவப்படுத்த வேண்டும் என்னும் உணர்வும் இருக்கின்றனவோ அவனே பிரபு!
வஸ : சரி! உண்மைதான்; அது போகட்டும்; உமது கடன்காரன் பெயரைச் சொல்லும்.
மகி : நான் மாதவராயப் பிரபுவின் வேலைக்காரனாய் இருந்தேன். அவர் ஏழ்மைத் தனம் அடைந்த பிறகு நானும் அவருக்குப் பாரமாய் இருக்கக் கூடாதென்று நினைத்து, அவரை விட்டு வந்து விட நேர்ந்தது. பிழைக்க வழி வேறு இல்லாமையால் நான் சூதாட ஆரம்பித்தேன். அதில் 10-ரூபாய் தோற்றேன்.
(வெளியில் இரண்டு சூதாடிகளும் கதவை இடிக்கிறார்கள்)
மகி : (திடுக்கிட்டு) ஆகா! அவர்கள் வந்து விட்டாற் போல் இருக்கிறதே! ஐயோ என்ன செய்யப் போகிறேன்.
வஸ : அடி மல்லிகா! இதோ இந்தக் காப்பை எடுத்துக் கொண்டு போய் 10-ரூபாய்க்குப் பதிலாய்க் கொடுத்து விட்டு வா. இவரே கொடுத்ததாகத் தெரிவி.
மல்லி : ஏனையா! உமது கடன்காரன் பெயரென்ன?
மகி : அவன் பெயர் முண்டன்.