பிரதா : (தனக்குள்) இதுவும் துரதிர்ஷ்டமா! ஆகா! இவ்வளவு பிரயாசைப்பட்டுத் தப்பித்து வந்ததும் பயனில்லாமல் போய் விடும் போல் இருக்கிறதே! என்னிடத்தில் ஒரு கத்திகூட இல்லையே! திரும்பவும் கைதியாகச் சிறைச்சாலையில் அடைப்பட்டிருப்பதைவிட உயிரை விடுவதே மேலானது. நல்லது வரட்டும். பீமசேனனைப் போல என் கைகளால் முஷ்டி யுத்தம் செய்கிறேன்.
(சந்தானகன் வண்டிக்குள் எட்டிப் பார்க்கிறான்)
பிரதா : (கைகூப்பி மெதுவான குரலில், ஐயோ! அபயம்! காப்பாற்ற வேண்டும் இப்பொழுது என்னுடைய உயிர் உம்முடைய கையில் இருக்கிறது.
சந்தா : பயப்பட வேண்டாம் அபயம் என்றவரை அவசியம் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா! (தனக்குள்) புறாவானது இராஜாளிப் பட்சியினிடத்தில் தப்பித்து வேடனுடைய வலையில் விழுந்ததைப் போல இவன் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேளையாக வீரகன் என்னைப் பார்க்கத் தூண்டினான். இதுவும் தெய்வச் செயல்தான். (கதவை மூடி விட்டு விரகனிடம் வந்து வீரகா நான் பிரதாபனை - இல்லை - வஸந்தஸேனையைப் பார்த்தேன். வண்டிக்காரன் சொன்னது உண்மைதான். மாதவராயர் காத்திருப்பார்; வண்டியைத் தாமசப்படுத்தாமல் ஓட்டிக் கொண்டு போகட்டும்.
வீர : சந்தானகா! கோபித்துக் கொள்ளாதே; நீ சொல்லிய விதத்தில் இருந்து எனக்கு ஒருவித சந்தேகம் உதிக்கிறது.
சந்தா : என்ன சந்தேகம்?
வீர : வண்டியில் இருந்து நீ திரும்பிய போது உன் முகம் மாறுபட்டது. தவிர, முதலில் நீ பிரதாபன் என்றாய்; பிறகு அதை வஸந்தஸேனை என்று மாற்றினாய். நீ இதைச் சொன்ன பொழுது உன்னுடைய குரல் தடுமாறியது.
சந்தா : நன்றாய் இருக்கிறது! அதற்காகத்தான் நீயே போக வேண்டுமென்று முதலிலேயே சொன்னேன்! நாம் பிரதாபனைத் தேடுகிறபடியால் அவன் அகப்படவில்லை என்று சொல்ல