ஆரம்பித்தேன்; இதில் சந்தேகமென்ன? பெட்டி வண்டிக்குள் தனியாய் இருந்த ஸ்திரீயை நான் பார்த்ததைப் பற்றி அவள் என்னைக் கடிந்து கொண்டாள். அதனால் என் முகம் மாறுபட்டிருக்கலாம்.
வீர : அப்படியானால் அவளை நான் ஒரு தரம் பார்க்கிறேன். அரசனுடைய கட்டளையை நிறைவேற்றும் நம்மைக் கோபித்துக் கொள்வதாவது நான் போகிறேன். என்ன செய்கிறாள் பார்க்கலாம்.
சந்தா : அடே முட்டாள்! நான் பார்த்தாய் விட்டதென்று சொல்லுகிறேன். நீ எதற்காகத் திரும்பவும் பார்க்கிறது? என்னை விட யோக்கியதையிலும், உண்மை பேசுவதிலும் நீ மேலானவனோ? என்னைப் பற்றி சந்தேகப்பட நீ யாரடா?
வீர : என்னைக் கேட்க நீ யாரடா? அடே வண்டிக்காரா! நிறுத்து. ஓட்டாதே; நான் வண்டியைப் பார்க்க வேண்டும்.
(வீரகன் வண்டிக்கு அருகில் போகிறான். சந்தானகன் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்துப் பின்புறமாகத் தள்ளி உதைக்கிறான்.)
வீர : (கோபத்துடன் எழுந்து) அடே இப்படிச் செய்ய உனக்கு அவ்வளவு துணிவா! இதோ இப்பொழுதே நான் இராஜனிடம் தெரிவித்து உன் சிரசை அடுத்த க்ஷணத்தில் வாங்கா விட்டால் நான் வீரகன் அல்ல. (போகிறான்)
சந்தா : சீக்கிரம் போடா! நாயே! நீ சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்! நீ மிகவும் பெரிய மனுஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ? (குணசீலனைப் பார்த்து வேகமாய் ஓட்டிக் கொண்டு போ; வேறு யாராவது தடுத்தால் வண்டியை வீரகனும் சந்தானகனும் சோதனை செய்தாய் விட்டது என்று தெரிவி. (வண்டியைத் திறந்து)
அம்ம வஸந்தஸேனை! நீங்கள் இந்த அடையாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். (தன் வாளைப் பிரதாபனிடம் கொடுக்கிறான்) (இரகசியமாக ஐயா! சந்தானகனை மறக்க மாட்டீர் என்று நினைக்கிறேன். இதைப் பிரியத்தினால் கேட்கிறேனே ஒழியப் பிரதி பலனாகக் கேட்கவில்லை.