வீர : ஏ கிழ முண்டமே! என்ன உளறுகிறாய்? நிஜத்தைச் சொல்.
தாய் : புரட்டனே! போ அப்பால்!
வீர : அடி! ஜாக்கிரதையாகப் பேசு. இவைகள் உன் மகளுடையவைகளா இல்லையா?
தாய் : நியாயாதிபதிகளே! தட்டான் தன்னுடைய ஸாமர்த்தியத்தினால் ஒன்றைப் போல மற்றொன்றைச் செய்யக் கூடும் அல்லவா! அவை என் மகளுடைய நகைகள் என்று நிச்சயமாக எப்படிச் சொல்லுவேன்?
நியா : ஆம். நிஜந்தான் அப்படியும் இருக்கலாம். மாதவராயரே இவ்வாபரணங்கள் உம்முடையவைகளா?
மாத : இல்லை.
நியா : அப்படியானால் யாருடைய ஆபரணங்கள்?
மாத : வஸந்தஸேனையினுடைய ஆபரணங்களே.
நியா : சொந்தக்காரியிடம் இருந்து உம்மிடம் இவை எப்படி வந்தன!
மாத : அவளே கொடுத்தாள்.
நியா : மாதவராயரே! நீர் உண்மையைப் பேச வேண்டும் என்பதை நான் திரும்பவும் சொல்ல வேண்டுவதில்லை. பொய் சொல்ல வேண்டாம்.
மாத : நான் சொல்வதைப் பொய்யென்று நினைப்பானேன்?
வீர : அவளைக் கொன்ற பிறகு அவ்வாபரணங்களை அவள் தேகம் கொடுத்தது? இவர் சொல்வதும் உண்மைதான்.