(Reading time: 74 - 148 minutes)

குறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை

spy

மே 1 , 2015

விடியற்காலை 6 மணி. மார்கழி மாதப் பனி, துடியலூர் கிராமம் முழுவதையும் போர்வை போல போர்த்தியிருந்தது . ஆங்காங்கே தெரு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக் கொண்டிருந்தன .பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக டீக்கடையை நோக்கி படையெடுத்தவண்ணம் இருந்தனர்.  அங்கே பெருசுகள் ஆளுக்கொரு பக்கமாக செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தார்கள் . தலையங்க செய்தியை உரக்கமாக  வாசிக்கத் தொடங்கினார் ராமசாமி பெருசு .

“ஆளுங்கட்சியைச் சேர்ந்த துடியலூர் சட்டமன்ற உறுப்பினர் மார்த்தாண்டம் மாயம் . போலீஸ் தேடுதல் வேட்டையில் தீவிரம் ” .

டீக்கடையில் இருந்த அத்தனை பெருசுகளும் ஒரு சேர, ராமசாமியையே பார்க்க, அவர் மேலும் படிக்க தொடங்கினார்.

மார்த்தாண்டம் வயது (52) .கோவை துடியலூர் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் . கட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இவர், நேற்று இரவு 8 மணியளவில் தன் பண்ணை வீட்டுக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும்போது அவர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .அவருடன் கார் டிரைவர் கதிரேசனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று இரவு முதல் அவரது வீடு மற்றும் பண்ணை வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர் . அவர் கடத்தப்பட்டாரா ? இல்லை தலைமறைவானாரா? என்கின்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” . என்று படித்து முடித்தார் ராமசாமி. கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று தன் பங்கிற்கு , என்னய்யா இது அநியாயம் ! ஆளுங்கட்சி MLAவ காணமாம் ! போன எலெக்சன்ல(election) ஓட்டு கேக்க வரும்போது, தோள்ல துண்டோடு பாத்தது . இப்ப தலைப்புச் செய்தில வர்ற அளவுக்கு பிரபலமாயிட்டாரே ! என்று   சிரித்தார் . அப்படியே இதைப்பற்றி பேசிக்கொண்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர் . டீக்கடை பெஞ்ச் காலியானது . 


நேரம் காலை 10 மணியைத் தாண்டியிருந்தது . MLA மார்த்தாண்டம் வீட்டுக்கு முன்பே மிகப்பெரிய ஜனக் கூட்டமிருந்தது . போலீஸ் வாகனங்கள் ஒலி விளக்குகளோடு நிறுத்தபட்டிருந்தன . கட்சிக் கரை வேஷ்டிகளுடன் ஆளுங்கட்சி தொண்டர்கள் ஒருபுறம், கவலை தோய்ந்த முகங்களுடன் காணப்பட்டனர் . மீடியாக்கள் தங்கள் பசிக்காக வருகிற போகிறவர்களையெல்லாம் வலுக்கட்டாயமாக, பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர் . துக்கமும் கண்ணீருமாக மார்த்தாண்டத்தின் மனைவி நிர்மலா , நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

நிருபர் 1 : மேடம் கடைசியா அவர் உங்ககிட்ட எப்ப பேசினார் ? என்ன சொன்னார் ?

நிர்மலா : பதில் சொல்வதற்கு முன்பே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்று போல் கொட்டிக்கொண்டிருந்தது . அவர் பண்ணை வீட்ல இருந்து கிளம்பிட்டதாகவும் , சீக்கிரம் வந்திடறேனும் சொன்னார் .

நிருபர் 2 : மேடம் ! உங்களுக்கு தெரிஞ்சு அவருக்கு யாரவது அரசியல் எதிரிகள் இருக்கிறாங்களா ?  நீங்க யார் மேலயாவது சந்தேகப்பட்றீங்களா ?

நிர்மலா : (சற்று கோபமான தொனியுடன்) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது . இன்னும் அவருக்கு என்ன ஆச்சுன்னே யாருக்கும் தெரியல. அவர் கண்டிப்பா திரும்பி வந்திடுவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.  மேலும் மேலும் கேள்வி கேட்டு என் வேதனையை அதிகரிக்காதீங்க . தயவு செஞ்சு என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்று சொல்லிவிட்டு அழுது புலம்பியபடியே வீட்டை நோக்கி நடந்தார். அந்த நேரம் பார்த்து ஆளுங்கட்சியின் சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் புண்ணியகோடி, தன் சகாக்களுடன் ஸ்கார்பியோ காரில் வந்து இறங்கினார் . அங்கே நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், அவரைப் பார்த்தவுடன் சல்யூட் அடித்து விட்டு, அங்கிருந்த ஜனக் கூட்டத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தனர் . அவர் உள்ளே நுழைந்ததும் , எதிரே வந்த  துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, அவரைப் பார்த்து சல்யூட் அடித்துவிட்டு குட் மார்னிங் சார் என்றார் .உடனே அமைச்சர் புண்ணியகோடி வெறுப்புடன் , குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும் ! ஏதாவது நம்பத்தகுந்த தகவல் இருக்கா? இதுவரைக்கும் என்ன க்ளு கெடைச்சிருக்கு ? என்றார்?

சார் அவரோட மொபைல் நம்பர trace பண்ணிட்டு இருக்கோம், இப்ப அது கடைசியா பாரதியார் பல்கலைக் கழகத்துக்கும் , மருதமலைக்கும் இடையே இருக்கிற ஒரு டவர்ல இருந்து ஒரு சிக்னல் கிடைச்சிருக்கு .அந்த இடத்த செக் பண்றதுக்காக எங்க டீம் அங்க போயிருக்காங்க. சோ!  கூடிய சீக்கிரமே ஒரு நல்ல தகவல நாம எதிர்பாக்கலாம் சார் என்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

என்ன கருமத்த வேணாலும் பண்ணுங்க ! எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல நியூஸ் வர்றனும் என்று கறாராக சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அமைச்சர் புண்ணியகோடி .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.