(Reading time: 27 - 54 minutes)

முறைத்த அவளைக் கண்ட அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"என்னாச்சு?"

"இன்னிக்கு எனக்கு என்ன ப்ரோகிராம் என்று தெரியுமில்லையா?"

அவள் கேட்ட உடனே தன் தலையில் தட்டிக் கொண்டான்.

"சாரிடா. சாரிடா."

"சரி சரி. உன் சாரியைத் தூக்கிக் குப்பையில் போடு. நானும் உன்னைப் பார்த்துக்கிட்டே வர்றேன். கலகலப்பையே காணோமே? என்ன எதுவும் பிரச்சினையா?"

அவன் சொல்வதா? வேண்டாமா? என்று யோசித்தான். தான் நினைப்பது போல் எதுவும் பிரச்சினை இல்லை என்றுவிட்டால் தான் தேவையில்லாமல் எல்லோரையும் குழப்பிவிட்டது போல் ஆகிவிடும்.

"அட ரொம்ப யோசிக்காதேப்பா. சும்மா சொல்லு."

இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அவள் அவனை விட இளையவளாய் இருந்தாலும் அவன் அவளை தோழியாய்தான் எண்ணியிருந்தான். ஒற்றைப் பையனோடு நின்றுவிட்ட சுமித்ராவுக்கும் அவளைக் கண்ட உடன் மகள் போன்ற உணர்வுதான். அதனால்தான் அவளால் தன் பெற்றோரைப் பிரிந்து அவர்கள் வீட்டில் சில வருடங்கள் தங்கியிருக்க முடிந்தது.

அவன் முதன் முதலில் படம் பண்ணும் போது வினோதினி தன் தந்தையிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொடுத்திருந்தாள். தன் நண்பனின் கனவு புரிந்தவள்.

"என்ன சொல்றதுன்னு தெரியலை வினு? கயலுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையோன்னு தோணுது."

வருத்தமுடன் கூறிய நண்பனை யோசனையோடு பார்த்தாள். அவன் விளையாட்டுக்காகப் பேசுபவன் அல்ல. அவன் முகத்திலும் அத்தனை தீவிரம் இருந்தது. இப்போதும் தன் மனதிற்குள்ளேயே போராடிவிட்டுத்தான் சொல்கிறான். அப்படி என்றால் அவர்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஒரு தோழியாய் நான் இதைக் கவனிக்காமல் இத்தனை நாட்கள் என்ன செய்தேன்? தன்னையே நொந்து கொண்டாள்?

"நீ என்ன சொல்றேப்பா? அப்படின்னா  உங்களுக்குள்...."

அவள் கேட்காமல் விட்டதை அவன் புரிந்து கொண்டான்.

"அப்படி எல்லாம் இல்லை. அந்த விசயத்தில் எல்லாம் அவள் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை."

"அப்புறம் எதுக்கு இப்படிப் பேசறே? நீ மகிழ்ச்சியா இருக்கியா இல்லையா?"

"நான் மகிழ்ச்சியா இருக்கேனா? இல்லையாங்கிறது முக்கியமில்லை. அவள் மகிழ்ச்சியா இல்லை."

அவன் திட்டவட்டமாய் கூறினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.