(Reading time: 11 - 21 minutes)

 இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும், அவளால் மறக்க முடியவில்லை, அவன் முகத்தை!

 உறக்கத்தில் கண்கள் மூடும்போதுகூட, அவன் எதிரே நின்று அட்டகாசமாக சிரிக்கிறான்.

 " முட்டாளே! உன்னை காப்பாற்ற அந்த கடவுள்கூட வரவில்லை, ஆனால் என்னைப் பார்! சுதந்திரமாக, நல்ல பதவியில் இருந்து, நல்ல அழகான பெண்ணை மணந்துகொண்டு பொறாமைப்படுகிற அளவுக்கு வாழ்கிறேன். இது உன்னைப் போன்ற ஏழைப் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்!"

 அந்த கொடூரனின் முகத்தைத் தான், இன்று பார்த்துவிட்டாள்!

 கல்பனா ரயிலேறி பெட்டியில் நுழையும்போதே, ஏற்கெனவே அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்த எழில், அவளைப் பார்த்து விட்டாள்.

 கல்பனா, பள்ளிக்கூட நாட்களில், அவளுக்கு நிறைய உதவி செய்திருக்கிறாள், அவள் மட்டுமா? கல்பனாவின் தாயும் அவளை பிரியமுடன் நடத்துவாள்!

 தன் கதையை கூறினால், கல்பனா மனமுடைந்து போவாள், பாவம்! அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம்! தான் யாரென்றே தெரியவேண்டாம் என்று முடிவெடுத்து, கல்பனாவைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதுபோல, நடித்தாள்.

 ஆனால், விதி யாரை விட்டது? நடக்கக்கூடாதவை தானே நடக்கின்றது.

 டிக்கட் பரிசோதகர், கல்பனாவிடம் டிக்கட் கேட்டபோது, கல்பனா தன் பர்ஸை திறந்து, டிக்கட்டை எடுத்து காண்பித்துவிட்டு, மறுபடியும் டிக்கட்டை பர்ஸில் வைத்துக் கொண்டாள்.

 இந்த ஐந்து நிமிடங்கள், கல்பனா தன் பர்ஸை திறந்தே கையில் வைத்திருந்தாள்!

 எதேச்சையாக, எழில் பர்ஸிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டாள்.

 கல்பனாவும் அவள் கணவனும்!

 அந்தக் கணவனின் முகம்...............!

 கன்னத்தில் பளாரென அறை விட்டதுபோல, எழில் துடித்துப் போனாள்!

 கனவில் அவளை பரிகசிக்கிற அதே முகம்! எகத்தாளமாக சிரிக்கிற அதே முகம்!

 அந்த நிலையிலும்கூட, எழிலுக்கு அந்த காமுகனை பழி வாங்க நல்ல சந்தர்ப்பம், கல்பனாவிடம் தெரிவித்துவிட்டால் போதும் என நினைக்கவில்லை!

 கல்பனாவுக்கு உண்மை தெரிந்தால், அதன்பிறகு அவளால் கணவனுடன் நிம்மதியாக வாழமுடியுமா?

 வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! அவள் நிம்மதியாக வாழட்டும்!

கல்பனா விழிப்பதற்கு முன்பே, எழில் வேறு பெட்டிக்கு மாறி, சென்னையில் இறங்கும்போது கூட்டத்தில் ஒளிந்து மறைந்தே போனாள்!

 அவளால் தன் தோழிக்கு செய்யமுடிந்த நன்மை அதுதான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.