"ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த! ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே! அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு" என்றான் தியாகு.
"காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே" என்றான் குழந்தை.
தியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.
விருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.
அன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி