கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.
தியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.
"சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம்" என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.
வீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.
சூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. "தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம்" என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். "சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான்" என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.
அவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.
"அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான்" என்று தியாகு கொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.
"நம்ப ரெண்டு பேருக்கு அது போதும்!" என்று அவள் அவனை ஆறுதல்