நன்கு படித்தவளும் கொம்ப்யூட்டர் கற்றவளுமான என் மனைவியும் குடும்பத்திற்கு அணிகலனாகத்தான் வந்து சேர்ந்தாள். மாமனார் மாமியாரோடு ஒத்துப் போய்க் குடும்பம் நடத்தக் கற்றுக் கொண்டாள்.
என்ன, ஒரு சராசரி மலேசிய இந்திய மத்திய தர வர்க்கக் குடும்ப மதிப்பீடுகளுக்கு குடும்பம் முற்றாக மாறி விட்டது. வீட்டில் ஆங்கிலம் அதிகம் புழங்கிற்று. பொங்கல் கொண்டாடுவது போய் தீபாவளியே முக்கிய பண்டிகை ஆயிற்று. அம்மா தீவிரமாகக் கோயிலுக்குப் போக ஆரம்பித்து விட்டார். சில சாமியார்களின் அதி தீவிரப் பக்தை ஆனார்.
அம்மாவைப் பார்த்து வசந்தாவும் பல ஆரியப் பண்டிகைகளுக்கு விரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போது ஒரு வர்த்தக நிறுவனம் வானொலியில் தீவிரமாக விளம்பரம் செய்து விற்றுவரும் ஓர் அட்டைப் பெட்டியில் நவீனமாக அடைத்து விற்கும் சுலபத்தில் எந்த சிறிய அறையிலும் அடங்கி விடும் ஹோம குண்டத்தை வாங்கி ஹோமமும் செய்து வருகிறாள். மாமியாரும் மருமகளும் ரொம்ப ஒற்றுமை.
அப்பாவோ நானோ இதுபற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை. "ஆமா, இந்த வெடப்புதான் உங்களுக்குத் தெரியும். யூ டோ ன்ட் அன்டர்ஸ்டேன்ட். இந்த குடும்பம் நாலு பேரு மதிக்கிற மாதிரி இருக்குதுன்னா அது நாங்க கோயிலுக்கு போக வர இருக்கிறதினாலதான். குடும்பம் நல்லா இருக்கிறது சாமி கும்பிட்றதுனாலதான், தெரிஞ்சிக்கிங்க!" என்று அம்மா தூக்கி எறிந்து விடுவார்.
எதிர்த்துப் பேசி அலுத்து விட்டோ ம், அப்பாவும் நானும். பெண்கள் ஏதாகிலும் சில நம்பிக்கைகளை தீவிரமாகப் பற்றிக் கொண்டிருக்க ஆசைப் படுகிறார்கள். ஆரிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் இடத்தில் வேறு என்ன நம்பிக்கைகளை சடங்குகளை வைப்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. சுற்றியுள்ள மத்திய தர வர்க்கம் தமிழ், திராவிட அடிப்படையிலிருந்து விலகி ஹிந்துப் போர்வையில் உள்ள ஆரியச் சடங்குகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது அம்மாவும் மனைவியும் அந்த நீரோட்டதில் உற்சாகமாகத் தவழ்ந்து நீந்த நானும் அப்பாவும் வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டோ ம். நாங்கள் இருவருமே ஆணாதிக்க வாதிகள்