இவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.
இபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது "ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி?" என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.
அவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.
"வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்று சொன்னாள் சுடர்.
*** *** ***
"ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்?" என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.
சுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை? ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை? எப்படி அண்ணனும் அண்ணியும்