முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். "அனாக் ஹிண்டு" (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் "கிலிங்ஙா கூய்" (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா...
*** *** ***
ஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார்க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச் சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.
இப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.
அவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த