போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார். பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.
அப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
சுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்டும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.
ரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.
அந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார். வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் "மாடன்" என்று பெயர் வைத்தார்கள். அவள் "மாடு" என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே? வெட்டிவிட்டார்கள் போல!
அப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளில்