குவாலா லும்பூர் மாற்றம்.
குவாலா லும்பூர் கொடூரமாக இருந்தது. ஒரு மாதம் கழித்தும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இங்கு சுந்தரராஜுவுக்கு எதைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. போக்குவரத்து நெறிசலில் அவனுடைய பழைய டாட்சன் கார் மூச்சுத் திணறுகிறது. எப்போது ரேடியேட்டர் வெடித்துச் சிதறப்போகிறதோ என்ற கவலையாக இருக்கிறது. சாலையில் மோட்டாரோட்டிகள் அவன் பக்கம் திரும்புவதே இல்லை. முன்னால் நோக்கியபடி விறைத்துப் போயிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாலும் முறைப்பது தவிர புன்னகைப்பதில்லை.
குவால லும்பூர் சிலாங்கூர் மேன்சன் அலுவலகத்துக்கு வந்த அன்றே மேலாளர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார். அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஆவலோடு உள்ளே போனவனை அவர் உட்காரக் கூடச் சொல்லவில்லை. "தோ பாருங்க சுந்தர்ராஜ். நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல. வியாபாரம் ரொம்ப தட்டையாய்ப் போச்சி. அதுக்கு காரணம் நாம் மார்கெட்டிங்கில காட்ர தீவிரம் போதாது. முதலாளி ஆள்களைக் குறைச்சி செலவைக் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ஆனா நாந்தான் அவரைத் தடுத்து வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்தில சரக்குகள் விற்பனைய 50% அதிகரிச்சிக் காட்றேன்னு அவருக்கு உறுதி குடுத்திருக்கேன். ஆகவே எனக்கு எந்த சமாதானமும் சொல்லாம சரக்குகள் விற்பனைய அதிகப் படுத்திற வழிய நீங்கள் பாக்கணும்.
"கிள்ளான்ல புதிய ரிடெய்ல் கடைகள் அதிகமா இருக்கு. எல்லாக் கடைக்கும் போங்க. நல்லாப் பேசுங்க. நம்ப சரக்கோட நன்மைய எடுத்துச் சொல்லுங்க. பத்துப் பெட்டி கொடுக்கிற எடத்தில 15 பெட்டி கொடுக்கிற மாதிரி பாருங்க. நீங்களே கொஞ்ச நேரம் கடையில நின்னு வர்ர வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கப் பாருங்க. அப்பதான் வியாபாரம் வளரும். கடைப் பையங்ககிட்டயும் பேசி நம்ம சரக்க முன்னுக்குத் தள்ளச் சொல்லுங்க. எல்லாம் உங்க பொருப்பு. இங்க உள்ள எவனும் சரியா வேலை செய்றதில்ல. சொன்னாலும் மாடு மாதிரி நிக்கிறாங்க. அதுக்காகத்தான் புது ஆள் வேணுமின்னு உங்களைத் தருவிச்சிருக்கேன். உங்க வேலையோட தெரவிசப் பாக்கணும். பாத்தபிறகுதான் சம்பள உயர்வு. அதுவரைக்கும் உங்களுக்குப் பினாங்கில குடுத்த சம்பளம்தான். ஆனா விற்பனை உயர்வைக் காட்டினிங்கன்னா நீங்க வானத்து அளவுக்கு உயரலாம். எங்களோட சேர்ந்து நீங்கள் வளரலாம். ஆனா உங்கள் முயற்சியின்மையினால வியாபாரம் கொறைஞ்சா இது மூழ்கிற படகாயிடும். கனத்தைக் குறைக்கிறதுக்கு கடல்ல தூக்கியெறியப் படக்கூடிய முதல் ஆளும் நீங்கதான். சரியா? உங்கள