"டெலிவரிக்குப் போன வேன் வரல! ரிப்பேர் ஆயிடிச்சின்னு சொல்லிட்டாங்க!"
"அத நேத்தே சொல்றதுக்கு என்ன?"
"வேன் வந்திரும் வந்திரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்க. ராத்திரி எட்டு மணி வரைக்கும் எனக்குத் தகவல் தெரியில!"
"வேன் இல்லைன்னா நீ உன் கார்ல போய் கொடுத்திருக்கக் கூடாதா? அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது? இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது? நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது?"
"நீங்கள்" என்ற மரியாதை கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே போய்விட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மசிர் புதிதாக முளைத்திருக்கிறது. சென்ற சில வாரங்களாகவே சிலவற்றைப் பிடுங்குவதும் சிலவற்றை முளைய வைப்பதுமாகத்தான் இருக்கிறார். சொல்ல ஏதும் இல்லாததால் மௌனமாக இருந்தான்.
"இப்பவே ஒரு ஆறு டஜன் எடுத்துக் கார்ல போட்டு கிள்ளான்ல போய் டெலிவெரி குடுத்துட்டு வா. வேன் டிரைவர் வந்ததும் நான் பாத்துக்கிறேன்!"
தலை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தான். "இன்னைக்கு ரெண்டு மூணு கிளையன்ட் வர்ரதாகச் சொல்லியிருக்காங்க ... காலையில!"
"எல்லாம் நான் பாத்துக்கிறேன் போ! இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது! போய் இருக்கிற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு!"
தலை குனிந்து வெளியே வந்தான். தலை விண் விண் என வலிக்கத் தொடங்கியிருந்தது. "டெலிவெரி என் வேலையில்லை!" என்று சொல்லியிருக்கலாம். அதைவிட கிள்ளானுக்கு அவன் காரோட்டிப் போனதேயில்லை. வேனில் ஒருமுறை போய் வந்திருக்கிறான். சரியாக வழி தெரியாது. ஆனால் இதெல்லாம் சொன்னால் ஏற்கனவே உடைபடும் மரியாதை மேலும்