நீச்சல் குளத்தின் அசையாத நீரின் உள்ளே சின்னஞ்சிறு நிலாக் கீற்று கலங்கித் தெரிந்தது. மேற்பரப்பில் ஏதோ பூச்சிகள் ஊர்ந்தன.
"இப்ப என்னா மணி நாகராஜ்?"
அவன் கையில் கடிகாரம் இல்லை. "என்னா ஒரு மூணு நாலு மணி இருக்கும்!"
"நாகராஜ். நீ உறுதியாத்தானே இருக்க!"
"ஆமாங்க!"
அநேகமாக முடிந்து போன சாராய போத்தலிலிருந்து ஒரு மிணறு குடித்தான் பாஸ்கரன். "நம்ப கடைசிக் குடி!" மீதியை நாகராஜுக்குக் கொடுத்தான். நாகராஜ் கவிழ்த்துக் குடித்துவிட்டு போத்தலை நீச்சல் குளத்துக்குள் எறிந்தான்.
"நன்றி நாகராஜ். என் கடைசி காலத்தில நீ வந்து சேர்ந்த! உயிர்த்தோழனா இல்லாவிட்டாலும் சாவுத் தோழனா வந்த!"
"ஆமாங்க!"
"நாகராஜ். காசு வேணாம். கார் வேணாம். கம்பெனி வேணாம். பார்ட்னர்ஷிப் வேணாம். கடன் வேணாம். ஆசை வேணாம். முக்கியமா இந்தப் பொண்டாட்டி சனியன் வேணாம்! வா நாகராஜ் குதிக்கலாம்!"
"நீங்க மொதல்ல குதிங்க!"
பாஸ்கரன் குதித்தான். நிலாக்கீற்று ஆயிரம் துண்டுகளாய்ச் சிதறிற்று. நீர்ப் பூச்சிகள் பீதியுடன் எல்லா மூலைக்கும் ஓடின. கைகளை அடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் அலைந்தான். அவன் கோட்டு தண்ணீருக்கு மேல் புஸ் என்று வந்தது. மூச்சுத் திமிறினான். மேலே வந்தான். மூச்சடங்க மீண்டும் முழுகினான்.