"ஏதோ நிம்மதியா ஒக்காந்து குடிக்கலான்னு வாங்கிட்டு வந்தேன். எப்போதும் இங்கதான் வர்ரது. நீ... நீங்க எப்படி வந்திங்க? ஏன் வந்திங்க?"
"குடு. நாக்கு வறண்டு போய் கிடக்கு!"
"ஐயோ. உங்கள பாத்தா பெரிய ஆளா தெரியுது. இது உங்களுக்கு ஒத்துக்காது. சாராயம். இது என்னப் போல சின்னவங்க குடிக்கிறது!"
"நீ சின்னவனா? இங்கிலீஷ் பேசிறிய!"
"·போர்ம் திரீ வரைக்கும் படிச்சங்க. ·பெயில்'லா. அப்புறம் ஊட்டவுட்டு ஒடியாந்திட்டேன் பாத்துக்குங்க! சீனன்கிட்ட கான்டிராக்ட்ல வேல செய்றேன். பத்து நாளைக்கு வேல இருக்கும் பத்து நாளைக்கு இருக்காது. வேலைக்கு ஒரு நாளைக்கு முப்பது வெள்ளி குடுப்பான் சீனன். இன்னக்கி முழுக்க மிஷின் வச்சி சிமிந்தி ஒடச்சேன். கையெல்லாம் விண்விண்னுன்னு தெறிக்குது. உங்களப் போலியா? ஏதோ டைரக்டர்ங்கிறிங்க. கோட்டு சூட்டு போட்டிருக்கிங்க?"
"அதெல்லாம் முடிஞ்சது. இப்ப இல்ல. குடு போத்தல!"
"காசு குடுத்து வாங்கிட்டு வந்திருக்கனே! உங்ககிட்ட காசு இருக்கா?"
பாக்கெட்டுக்குள் கைவிட்டான். பர்சைக் காணவில்லை. கார் சாவி அகப்பட்டது. கார் சாவியை நீட்டினான். "இந்தா கார் சாவி. கார நீ எடுத்துக்க! போத்தல குடு!" என்றான்.
அவன் கை நீட்டிக் கார் சாவியை வாங்கிக் கொண்டான். பரிசோதித்தான். "என்ன காரு?" என்று கேட்டான்.
"வோல்வோ. அதோ கடைக்கு முன்னால நிப்பாட்டி வச்சிருக்கேன். விடியறதுக்கு முன்னால போய் எடுத்துக்கோ"
"எடுத்திட்டு?"