"வச்சுக்க. வித்திரு. பார்ட் பார்ட்டா கழட்டி வித்திரு. சீனன் வாங்கிக்குவான்"
"உங்களுக்கு!"
"எனக்குத் தேவைப் படாது. இன்னைக்கு நான் செத்திரப் போறேன்"
அவன் சாவியைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான். "ரொம்ப மனக் கஷ்டம் போல இருக்கு உங்களுக்கு. ரொம்ப குடிச்சிருக்கிங்க!"
"போதாது. போத்தல குடு!"
அவன் உட்கார்ந்து காகிதத்தைப் பிரித்து ஒரு பெரிய போத்தலை எடுத்தான். திறந்து பாஸ்கரனிடம் நீட்டினான். பாஸ்கரன் போத்தலைத் தூக்கி வாயில் ஊற்றினான். முகத்தைச் சுளித்து விழுங்கினான். "ஐய்" என்று கத்தினான்.
"டேம்மிட்! என்னடா இது?"
"சாராயங்க. புலிச்சாப். மொதல்ல அப்படித்தான் எரியும். அப்புறம் சரியாயிடும்!"
அவனும் போத்தலை வாங்கி ஊத்திக் கொண்டான்.
"சிகிரெட் வச்சிருக்கியா?"
"சீச்சீ! அந்தக் கெட்ட பளக்கமெல்லாம் கெடையாதுங்க!"
கொஞ்ச நேரம் பாஸ்கரனை மேலும் கீழுமாகப் பார்த்தான்.
"நீங்க எப்படி இங்க வந்திங்க?"